Loading...
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் 850 வேலைவாய்ப்புகளை குறைக்கிறது: பணிகளை இந்தியாவிற்கு மாற்றத் திட்டம்
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் 850 வேலைவாய்ப்புகளை குறைக்கிறது

ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் 850 வேலைவாய்ப்புகளை குறைக்கிறது: பணிகளை இந்தியாவிற்கு மாற்றத் திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
03:43 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான குவாண்டாஸ் ஏர்வேஸ், தனது நிர்வாக செலவுகளைக் குறைக்கவும் பணிகளை சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவில் உள்ள சுமார் 850 வேலைவாய்ப்புகளைக் குறைத்து, அந்தப் பணிகளை இந்தியாவிற்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் அதிகரித்து வரும் எரிபொருள் செலவு மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி செயல்பாடுகளை நவீனப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஒப்பந்தம்

அக்சென்ச்சர் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம்

தனது பின்னணி தொழில்நுட்ப அமைப்புகள், தகவல் தரவுகள் மற்றும் நிர்வாக முறைகளை நவீனப்படுத்துவதற்காக சர்வதேச சேவை நிறுவனமான அக்சென்ச்சர் உடன் பல ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக குவாண்டாஸ் அறிவித்துள்ளது.

நிதி, கொள்முதல், மனித வளம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பால் முதற்கட்டமாகப் பாதிக்கப்படுவர்.

இந்த பணிநீக்க நடவடிக்கைகள் 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து படிப்படியாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல்

"நிச்சயமற்ற சூழலுக்கு வருந்துகிறேன்": CEO வனேசா ஹட்சன்

பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு குவாண்டாஸ் நிறுவனத்தின் CEO வனேசா ஹட்சன் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "சில ஊழியர்களுக்கு இது மிகுந்த கடினமான செய்தியாக இருக்கும்; இதனால் ஏற்படும் நிச்சயமற்ற சூழலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். குவாண்டாஸ் நிறுவனம் கடந்த பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட பழைய மென்பொருள் செயலிகளை பயன்படுத்தி வருகிறது. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்படவில்லை".

"அக்சென்ச்சர் உடனான இந்த கூட்டணி கார்ப்பரேட் செயல்பாடுகளை எளிமையாக்கவும், இரட்டைப் பணிகளைக் குறைத்து செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளது; அதற்கு ஏற்ப நாம் மாற வேண்டியது அவசியமாகிறது" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தியா

இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் சூழல்

சுமார் 28,000 ஊழியர்களை ஆஸ்திரேலியாவிலும், 4,000 ஊழியர்களை வெளிநாடுகளிலும் கொண்டுள்ள குவாண்டாஸ் நிறுவனம், எரிபொருள் கட்டண உயர்வால் விமானக் கட்டணங்கள் உயரக்கூடும் எனவும் விமான சேவைகள் குறைக்கப்படலாம் எனவும் சமீபத்தில் எச்சரித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பணியிடங்கள் இந்தியாவில் உள்ள திறமையான ஊழியர்களுக்கு மாற்றப்படவுள்ள நிலை, சர்வதேச அளவில் இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகச் சேவைத் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT