மத்திய பட்ஜெட்டிற்கு முன்பாக LTCG மூலதன ஆதாய வரியில் எந்த மாற்றமும் இல்லை: CBDT தலைவர் ரவி அகர்வால் தகவல்
செய்தி முன்னோட்டம்
நீண்டகால மூலதன ஆதாய வரியில் (LTCG) மாற்றங்களைக் கோரும் பரிந்துரைகள் குறித்து தொழில்துறையினருடன் ஆலோசனைகள் நடைபெற்று வந்தாலும், மத்திய பட்ஜெட்டிற்கு முன்பாக இதில் எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது என மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ரவி அகர்வால் தெரிவித்துள்ளார். நவம்பர் 16 அன்று இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் வரி செலுத்துவோர் ஓய்வறையைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், பட்ஜெட்டிற்கு முந்தைய கூட்டங்களில் பெறப்பட்ட LTCG மற்றும் பத்திர பரிவர்த்தனை வரி (STT) தொடர்பான கோரிக்கைகளின் வருவாய் தாக்கம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறினார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
வருமான வரி ரீஃபண்ட்
வருமான வரி ரீஃபண்ட் 25% அதிகரிப்பு; விரைவுபடுத்தப்பட்ட வரித் திரும்பப் பெறும் நடைமுறை
வரி செலுத்துவோர் கடந்த மதிப்பீட்டு சுழற்சியில் ரீஃபண்ட் பெறுவதில் தாமதத்தை எதிர்கொண்ட நிலையில், நடப்பு ஆண்டில் நிலைமை வெகுவாக மேம்பட்டுள்ளதாக ரவி அகர்வால் சுட்டிக்காட்டினார்.
வரி பரிசீலனை நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டதால் ரீஃபண்ட் வழங்கும் கால அளவு குறைந்து, இந்த ஆண்டு வருமான வரி ரீஃபண்ட் தொகை 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் எளிமையாக்கப்பட்ட புதிய TDS படிவங்கள் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருவதற்கு பயனர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேரடி வரி வசூல்
₹26.97 லட்சம் கோடி நேரடி வரி வசூல் இலக்கை எட்டுவோம் என நம்பிக்கை
தனிநபர் வருமான வரி வசூல் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாக இருந்தாலும், நடப்பு 2026-27 நிதியாண்டிற்கான ₹26.97 லட்சம் கோடி நேரடி வரி வசூல் இலக்கை அரசு நிச்சயம் எட்டும் என ரவி அகர்வால் நம்பிக்கை தெரிவித்தார்.
நவம்பர் 10 நிலவரப்படி நிகர நேரடி வரி வசூல் கடந்த ஆண்டை விட 11.76 சதவீதம் உயர்ந்து ₹14.42 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இது முழு ஆண்டு இலக்கில் 53.5 சதவீதமாகும்.
பங்குச் சந்தை
பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் LTCG சலுகை எதிர்பார்ப்பும் Nudge திட்ட வெற்றியும்
தற்போது பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ₹1.25 லட்சத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு 12.5 சதவீதமும், குறுகிய கால ஆதாயத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க இவற்றைக் குறைக்க வேண்டும் எனத் தொழில்துறை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையே வருமான வரித் துறையின் 'Nudge' முயற்சி மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் திருத்தப்பட்ட வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் ரவி அகர்வால் பாராட்டினார்.