
காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் திவால்; தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
காபி டே குழுமத்தின் தாய் நிறுவனமான காபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் (சிடிஇஎல்) மீது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (என்சிஎல்டி) திவால் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
ஐடிபிஐ அறக்கட்டளை சேவைகள் லிமிடெட் (IDBITSL), சிடிஇஎல் ₹228.45 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததாக வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இந்த காலகட்டத்தில் சிடிஇஎல்லின் செயல்பாடுகளை நிர்வகிக்க என்சிஎல்டியின் பெங்களூர் அமர்வு ஒரு இடைக்கால தீர்மான நிபுணரை நியமித்துள்ளது.
சேவைகள் துறை மற்றும் காபி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வணிக நிறுவனமான சிடிஇஎல், திரும்பப் பெறக்கூடிய மாற்ற முடியாத கடனீட்டுப் பத்திரங்களின் (என்சிடி) கூப்பன் செலுத்துவதில் தவறிவிட்டது.
தீர்ப்பாயம் தீர்ப்பு
காபி டே குழுமம் தொடர்பான வழக்கில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் முடிவு
முன்னதாக, நிதிக் கடன் வழங்குபவர் மார்ச் 2019இல் 1,000 என்சிடிகளில் ₹100 கோடி முதலீடு செய்தார். இதன்பின்னர் ஜூலை 2019இல் நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்ட பிறகு நிறுவனம் சிக்கலை எதிர்கொண்டது.
இதையடுத்து என்சிடி கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கான கடன் பத்திர அறங்காவலராக IDBITSL நியமிக்கப்பட்டது.
எனினும், தொடர்ந்து கடனை திருப்பி செலுத்தாமலே இருந்து வந்த நிலையில், தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திற்கு சென்று தற்போது திவால் செயல்முறைக்குள் சென்றுள்ளது.
இதற்கிடையே, ஜூலை 20, 2023 அன்று இண்டஸ்இந்த் வங்கியின் ₹94 கோடி கடன் தொடர்பாக, கஃபே காபி டே சங்கிலியை இயக்கும் காபி டே குளோபல் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிரான திவால் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.