Loading...
LTCG vs STT: பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் கோல்டு இடிஎஃப் முதலீடுகளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?
பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் கோல்டு இடிஎஃப் முதலீடுகளுக்கான வரிவிதிப்பு முறைகள்

LTCG vs STT: பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் கோல்டு இடிஎஃப் முதலீடுகளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 19, 2026
06:44 pm

செய்தி முன்னோட்டம்

2027 மத்திய பட்ஜெட் நெருங்கி வரும் நிலையில் நீண்டகால மூலதன ஆதாய வரி மற்றும் பத்திர பரிவர்த்தனை வரி குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இவ்விரண்டு வரிகளும் முதலீட்டாளர்களை வெவ்வேறு விதங்களில் பாதிக்கின்றன. முதலீடுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு விற்கும்போது கிடைக்கும் லாபத்தின் மீது மட்டும் எல்டிசிஜி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் லாபமோ நஷ்டமோ எதுவாக இருந்தாலும் எஸ்டிடி வரி வசூலிக்கப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் தங்கள் நிகர வருமானத்தைக் கணக்கிடும்போது இந்த இரண்டு வரிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரி விதிகள்

பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் கோல்டு இடிஎஃப்-களுக்கான LTCG வரி விதிகள்

பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் ஈக்விட்டி இடிஎஃப் முதலீடுகளை 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்து விற்றால் அவை நீண்டகால சொத்துக்களாகக் கருதப்படுகின்றன.

ஒரு நிதியாண்டில் இவற்றின் மூலம் கிடைக்கும் ₹1.25 லட்சத்திற்கு மேற்பட்ட லாபத்திற்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 65 சதவீத உள்நாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கும் இதே சலுகை பொருந்தும்.

ஆனால் 12 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப்-களுக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்பட்டாலும் ₹1.25 லட்சம் விலக்கு கிடையாது.

வரி ஒப்பீடு

₹2 லட்சம் லாபத்திற்குப் பங்குகள் மற்றும் கோல்டு இடிஎஃப்களில் செலுத்த வேண்டிய வரி ஒப்பீடு

இந்த வரி வித்தியாசத்தை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் முதலீட்டாளர்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

ஒரு முதலீட்டாளர் பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் ₹2 லட்சம் நீண்டகால லாபம் ஈட்டினால் ₹1.25 லட்சம் விலக்கு போக ₹75,000-க்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும்.

இதன்படி 12.5 சதவீத விகிதத்தில் அடிப்படை வரியாக ₹9,375 மட்டுமே கட்ட வேண்டியிருக்கும்.

ஆனால் அதே ₹2 லட்சம் லாபத்தைக் கோல்டு இடிஎஃப் மூலம் ஈட்டினால் முழுத் தொகைக்கும் வரி விதிக்கப்பட்டு ₹25,000 செலுத்த நேரிடும்.

ADVERTISEMENT

வரி விலக்கு

ஏப்ரல் 1, 2026 முதல் அமலில் உள்ள STT விகிதங்களும் கோல்டு இடிஎஃப் வரி விலக்கும்

தேசிய பங்குச் சந்தை விதிகளின்படி ஏப்ரல் 1, 2026 முதல் புதிய எஸ்டிடி வரி விகிதங்கள் நடைமுறையில் உள்ளன.

இதன்படி டெலிவரி அடிப்படையிலான பங்கு கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய இரண்டிற்கும் தலா 0.1 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.

இன்ட்ராடே பங்கு விற்பனைக்கு 0.025 சதவீதமும், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இடிஎஃப் டெலிவரி விற்பனைக்கு 0.001 சதவீதமும் விதிக்கப்படுகிறது.

இருப்பினும் தங்கம், வெள்ளி, லிக்விட், கில்ட் மற்றும் குறிப்பிட்ட சர்வதேச இடிஎஃப் பரிவர்த்தனைகளுக்கு எஸ்டிடி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT