ஆகஸ்ட் 1 முதல் நிதித்துறை விதிகளில் புதிய மாற்றங்கள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
2024 ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர், ஆயுள் காப்பீடு அல்லாத பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டார்களைப் பாதிக்கும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிதித்துறையில் அமலுக்கு வருகிறது. இதில் முதலாவது வருமான வரிக் கணக்கை சரிபார்ப்பதாகும். கடந்த ஜூலையில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவர்கள், ஆன்லைனில் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் வருமானத்தை சரிபார்க்க வேண்டும். இந்த சரிபார்ப்பை மேற்கொண்ட பின்னரே, வருமான வரித்துறை பரிசீலிக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தச் செயல்முறையை முடிக்கத் தவறினால், ₹5,000 (வருமானம் ₹5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் ₹1,000) அபராதம் செலுத்த நேரிடும்.
பாலிசிதாரர்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்கும் நடைமுறை
இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆகஸ்ட் 2024 முதல், ஆயுள் காப்பீடு அல்லாத இதர பாலிசிதாரர்கள் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து விரைவான ஒப்புதலை பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, மருத்துவமனைகள் மூலம் விண்ணப்பங்களைப் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள், அவற்றிற்கு ரொக்கமில்லா அங்கீகாரம் வழங்குவது குறித்த தங்கள் முடிவை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கை, பாலிசிதாரர்களுக்கான செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, 100% பணமில்லா அங்கீகாரத்தை எளிதாக்குவதற்கான இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சிகளில் ஒன்றாகும்.
பரஸ்பர நிதிகளுக்கு புதிய சொத்து வகுப்பை அறிமுகம் செய்தது செபி
இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தை மேற்பார்வையிடும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) பரஸ்பர நிதிகளுக்கான புதிய சொத்து வகுப்பை முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவு முதலீட்டாளர்களுக்கு அதிக ரிஸ்க் மற்றும் பெரிய டிக்கெட் பங்குகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட விருப்பத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகரிக்கப்படாத முதலீடுகள் சந்தையில் பரவுவதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த முன்மொழிவு மீதான தங்கள் கருத்துக்களை ஆகஸ்ட் 6 வரை செபியிடம் பொதுமக்கள் வழங்கலாம். இவற்றை செபி ஆய்வு செய்து, அதனடிப்படையில் புதிய சொத்து விதியை அமலுக்கு கொண்டு வரும்.