Loading...
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ! ஜியோ பிளாட்பார்ம்ஸ் அக்டோபர் இறுதியில் பங்குச்சந்தையில் நுழைகிறது?
ஜியோ பிளாட்பார்ம்ஸ் அக்டோபர் இறுதியில் பங்குச் சந்தையில் நுழைய திட்டம்

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ! ஜியோ பிளாட்பார்ம்ஸ் அக்டோபர் இறுதியில் பங்குச்சந்தையில் நுழைகிறது?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2026
07:03 pm

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டிஜிட்டல் சேவைகளுக்கான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம், வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் இந்திய பங்குச் சந்தையில் தனது பங்குகளைப் பட்டியலிடத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. சர்வதேச அளவில் 143 முதல் 146 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சம் கோடிக்கும் மேல்) நிறுவன மதிப்பில் இந்த ஐபிஓ களம் இறங்கவுள்ளது. சுமார் 3.8 பில்லியன் டாலர் நிதி திரட்ட எதிர்பார்க்கப்படும் இந்த வெளியீடு, இந்திய முதன்மைப் பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக நிகழ்வாகக் கருதப்படுகிறது.

செபி ஒப்புதல்

சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் செபி ஒப்புதல்

அமெரிக்கா, பிரிட்டன், துபாய், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய முக்கிய நிதி மையங்களில் சர்வதேச முதலீட்டாளர்களுடனான சந்திப்பை ஜியோ பிளாட்பார்ம்ஸ் வெற்றிகரமாக முடித்துள்ளது.

ஆகஸ்ட் 28 அன்று செபியிடமிருந்து இறுதி பரிசீலனைக் கடிதத்தைப் பெற்ற இந்நிறுவனம், அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் இறுதி ஆவணங்களை சமர்ப்பிக்கவுள்ளது.

விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான நடைமுறைகள் தொடங்கி, அக்டோபர் 23-க்குள் பொதுச் சந்தாவுக்கான ஐபிஓ திறக்கப்பட வாய்ப்புள்ளது.

பங்கு எண்ணிக்கை

27 கோடி புதிய பங்குகள் வெளியீடு மற்றும் நிறுவன வளர்ச்சி

தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு ஆவணங்களின்படி, ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் 27 கோடி புதிய ஈக்விட்டி பங்குகளை பங்குச் சந்தையில் வெளியிட முன்மொழிந்துள்ளது.

இது நிறுவனத்தின் வெளியீட்டிற்குப் பிந்தைய மொத்தப் பங்குகளில் 2.9 சதவீதத்தைக் குறிக்கிறது.

தற்போது இந்தியாவில் 50.6 கோடி மொபைல் வாடிக்கையாளர்களையும், 26.85 கோடி 5ஜி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ள ஜியோ, நாட்டின் 5ஜி வயர்லெஸ் டேட்டா பயன்பாட்டில் சுமார் 60 சதவீத பங்கைக் கொண்டு முதன்மை நிறுவனமாகத் திகழ்கிறது.

ADVERTISEMENT

முதலீடுகள்

மெட்டா, கூகுள் முதலீடுகளும் ரிலையன்ஸ் குழுமத்தின் புதிய மைல்கல்லும்

2026 நிதியாண்டில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ரூ.1,46,885 கோடி வருவாயையும், ரூ.30,053 கோடி நிகர லாபத்தையும் பதிவு செய்து வலுவான நிதி வளர்ச்சியை எட்டியுள்ளது.

ஏற்கனவே மெட்டா, கூகுள், கேகேஆர் மற்றும் சில்வர் லேக் போன்ற சர்வதேச முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் இதில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளன.

2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து பங்குச்சந்தைக்கு வரும் முதல் பொதுப் பங்கு வெளியீடு இது என்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ADVERTISEMENT