பேட்டரி உற்பத்தித் துறையை மேம்படுத்த 2.44 பில்லியன் டாலர் மானியம் வழங்கும் ஜப்பான்
ஜப்பான் தனது பேட்டரி உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் $2.44 பில்லியன் அளவிற்கு மானியங்களாக முதலீடு செய்ய உள்ளது. ஜப்பானின் சேமிப்பு பேட்டரி உற்பத்தி திறன் மற்றும் தொடர்புடைய கூறுகள், பொருட்கள் மற்றும் சாதனங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன், 12 குறிப்பிடத்தக்க மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்படும். இந்த நடவடிக்கை வேகமாக விரிவடைந்து வரும் மின்சார வாகன சந்தை மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய போட்டியை எதிர்கொள்வதற்கான முன்முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஜப்பானின் மானியத்தின் பயனாளிகளில் டொயோட்டா, சுபாரு, நிசான் மற்றும் மஸ்டா போன்ற வாகன உற்பத்தியாளர்கள், பேட்டரி தயாரிப்பு நிறுவனமான பானாசோனிக் போன்றவை அடங்கும். இந்த திட்டங்களின் நோக்கம் உலகளாவிய எலக்ட்ரிக் வாகன பேட்டரி சந்தையில் ஜப்பானின் நிலையை உயர்த்துவதாகும்.
உலக பேட்டரி சந்தையில் சீனா ஆதிக்கத்திற்கு எதிரான ஜப்பானின் போராட்டம்
உலக பேட்டரி சந்தையில் சீன நிறுவனங்கள் முன்னணியில் இருப்பதால், பேட்டரி உற்பத்தியை விரிவுபடுத்தும் ஜப்பானின் உந்துதல் வருகிறது. இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை, டாப் 10 பேட்டரி சப்ளையர்களில் ஆறு சீன நிறுவனங்கள் ஆகும். அவை 65.3% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன என்று எஸ்என்இ ஆராய்ச்சியின் தரவு காட்டுகிறது. ஒப்பிடுகையில், டாப் 10 இடங்களுக்குள் உள்ள ஜப்பானின் ஒரே நிறுவனமான பானாசோனிக், அதன் சந்தைப் பங்கு கடந்த ஆண்டில் 7.1% இலிருந்து 4.3% ஆகக் குறைந்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சரிவு சீனாவின் விரிவடைந்து வரும் பேட்டரி தொழிற்துறையுடன் போட்டியிடும் ஜப்பானின் போராட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.