
2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
வருமான வரி (ஐடிஆர்) தாக்கல் செய்வது இந்திய வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான வருடாந்திர பணியாகும். இது சட்டப்பூர்வ இணக்கத்தை உறுதிசெய்து கடன்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் விசாக்கள் போன்ற நிதி சேவைகளை அணுக உதவுகிறது.
ஒரு ஐடிஆர் உங்கள் வருமானம், விலக்குகள் மற்றும் இந்திய வருமான வரித் துறைக்கு செலுத்தப்படும் வரிகளை விவரிக்கிறது.
நீங்கள் சம்பளம் பெறுபவராக இருந்தாலும், சுயதொழில் செய்பவராக இருந்தாலும் அல்லது ஃப்ரீலான்ஸராக இருந்தாலும் சரி, சரியான நேரத்தில் தாக்கல் செய்வது அவசியமாகும்.
2024-25 நிதியாண்டில் (AY 2025-26), தனிநபர்கள் தங்கள் மொத்த வருமானம் புதிய வரி நிர்வாகத்தின் கீழ் அடிப்படை விலக்கு வரம்புகளை மீறினால் ஐடிஆரை தாக்கல் செய்ய வேண்டும்.
தாக்கல்
யாரெல்லாம் தாக்கல் செய்ய வேண்டும்
அதன்படி தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு (60-79 வயது) ₹3 லட்சம், மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ₹5 லட்சத்திற்கு அதிகம் வருமானம் ஈட்டுபவர்கள் நிச்சயமாக தாக்கல் செய்ய வேண்டும்.
புதிய வரி விதிப்பின் கீழ் பிரிவு 87 ஏ தள்ளுபடியுடன் ₹12 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை என்று அரசாங்கம் அறிவித்த போதிலும், இந்த நன்மையைப் பெற வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமாக உள்ளது.
இதன்படி ஜூலை 31, 2025க்குள் சம்பளம் வாங்கும் தனிநபர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத நிபுணர்கள் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
காலக்கெடு
நிறுவனங்களுக்கான காலக்கெடு
அக்டோபர் 31, 2025 அன்று வரி தணிக்கைக்கு உட்பட்ட வணிகங்களுக்கு காலக்கெடுவாகும். மேலும், நவம்பர் 30, 2025 அன்று சர்வதேச அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு காலக்கெடுவாகும்.
டிசம்பர் 31, 2025 தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரிகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் மற்றும் வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.
வருமான வரித் துறையின் எளிமைப்படுத்தப்பட்ட மின்-தாக்கல் போர்ட்டலுடன், வரி செலுத்துவோர் முன்கூட்டியே தயார் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பான் கார்டு, ஆதார், படிவம் 16, வங்கி அறிக்கைகள் மற்றும் முதலீட்டுச் சான்றுகள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.