Loading...
அமெரிக்காவின் 25% வரி முன்மொழிவுக்கு இந்தியா பதிலடி: வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியான அறிக்கை
இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க முன்மொழிந்துள்ளது அமெரிக்கா

அமெரிக்காவின் 25% வரி முன்மொழிவுக்கு இந்தியா பதிலடி: வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியான அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
08:39 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-இன் கீழ் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க முன்மொழிந்துள்ள நிலையில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதற்கு திட்டவட்டமான பதிலை அளித்துள்ளது. எந்தவொரு துறையிலும் இந்தியாவிற்கு 'கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன்' இல்லை என்று இந்தியா உறுதியாக மறுத்துள்ளதுடன், இருதரப்பு வர்த்தகப் பிரச்சினைகளுக்கு தற்போது நடைபெற்று வரும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

வர்த்தக அமைச்சகம்

அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய வர்த்தக அமைச்சகம்

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடங்கியது முதலே இந்தியா ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சகம், தொடக்க அறிவிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளிலும் இந்தியாவின் எந்தவொரு துறையிலும் தேவைக்கு அதிகமான உற்பத்தித் திறன் இல்லை என்பதைத் தெளிவாக பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

பேச்சுவார்த்தை

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு

இந்தியாவும், அமெரிக்காவும் தற்போது இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

வர்த்தகம் தொடர்பான எவ்வித கவலைகளாக இருந்தாலும், அவற்றை இந்த இருதரப்பு ஒப்பந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே பேசித் தீர்க்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலையான நிலைப்பாடாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இந்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வரி முன்மொழிவு

25 சதவீத வரி முன்மொழிவும், 17 சதவீத சலுகை வாய்ப்பும்

முன்னதாகப் புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், இந்தியா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகளின் உற்பத்தித் துறைக் கொள்கைகள் அமெரிக்க வர்த்தகத்தைப் பாதிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதன்படி, சில குறிப்பிட்ட பொருட்களுக்கு விலக்கு அளித்து, மற்ற இந்தியப் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள பிரிவு 301 வரிகளுக்கு நிகராக 25 சதவீதம் வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதே சமயம், உற்பத்தித் துறையில் அதிகப்படியான திறன் குறித்த அமெரிக்காவின் கவலைகளுக்கு தீர்வு காணும் வகையில் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா எட்டினால், இந்த வரி விகிதம் 17 சதவீதமாகக் குறைக்கப்படும் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

கருத்துக் கேட்பு

அடுத்தகட்ட நடைமுறை

அமெரிக்கா முன்மொழிந்துள்ள இந்தப் புதிய வரிகள் உடனடியாக அமலுக்கு வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளின்படி, வரும் ஜனவரி மாதம் வரை பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, முறையான விசாரணைகள் நடத்தப்பட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

தற்போதைய சூழலில், ஏற்றுமதியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் வாஷிங்டனுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இந்தியா எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகிறது என்பது சர்வதேச பொருளாதார வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT