இந்தியா - நியூசிலாந்து ஒப்பந்தம் அக்டோபர் 20 முதல் அமல்: யாருக்கு என்னென்ன லாபம்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) வரும் அக்டோபர் 20 (விஜயதசமி) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2026-இல் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியப் பொருட்களுக்கு நியூசிலாந்து 100% வரிவிலக்கு அளித்துள்ளது. இதன்மூலம், இந்திய ஏற்றுமதியாளர்கள் மீதான 10% வரையிலான அதிகபட்ச வரிகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. பதிலுக்கு, நியூசிலாந்தின் 95% ஏற்றுமதிப் பொருட்களுக்கு இந்தியா 70% வரிகளை படிப்படியாகக் குறைக்கிறது. அதேவேளையில், இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பால் பொருட்கள், வெங்காயம் மற்றும் குறிப்பிட்ட உலோகங்களுக்கு இந்த வரிவிலக்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள்
இந்த ஒப்பந்தத்தின் கீழ், நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது.
மேலும், இந்தியத் திறன்மிகு பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 5,000 தற்காலிக பணி விசாக்கள் வழங்கப்படும்.
நியூசிலாந்தில் STEM படிப்புகளை முடிக்கும் இந்திய மாணவர்களுக்கு படிப்பிற்கு பிந்தைய பணி விசா (Post-Study Work Visa) 3 முதல் 4 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக ஒப்பந்த வரலாற்றிலேயே முதல்முறையாக ஆயுர்வேதம் மற்றும் யோகா உள்ளிட்ட இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு நியூசிலாந்து சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது.
சாதாரண சரக்குகளுக்கு 48 மணி நேரத்திற்குள்ளும், அழுகும் பொருட்களுக்கு 24 மணி நேரத்திற்குள்ளும் சுங்கச் சான்றளிப்பு முடிவக்கப்படும்.
வரவேற்பு
நியூசிலாந்து பிரதமர் வரவேற்பு
இந்த ஒப்பந்தம் இறுதியானதைக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், தமது ஆட்சிக் காலத்தில் வாக்குறுதி அளித்தபடி இந்தியாவோடு வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளும், வர்த்தக வளர்ச்சியும், அதிக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.