இந்தியாவுக்கு அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை அடைய 75 ஆண்டுகள் ஆகும்; உலக வங்கி அறிக்கை
தற்போதைய நிலை தொடர்ந்தால், இந்தியாவின் தனிநபர் வருமானம் அமெரிக்காவின் வருமான அளவில் கால் பகுதியை எட்டுவதற்கே ஏறக்குறைய இன்னும் 75 ஆண்டுகள் ஆகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. "உலக வளர்ச்சி அறிக்கை 2024: நடுத்தர வருமான நிலை" என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த சில தசாப்தங்களில் இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் அதிக வருமானம் பெறும் நாடுகளாக மாறுவதில் கடுமையான தடைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளின் போக்குகளை ஆய்வு செய்த அந்த அறிக்கை, தற்போதைய நிலை தொடர்ந்தால் அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை அடைய சீனாவுக்கு 10 ஆண்டுகள் ஆகலாம் என்றும், இந்தோனேசியாவுக்கு கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளது.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை குறிப்பிட்ட உலக வங்கி
இந்தியாவை பொறுத்தவரை, தற்போதைய நிலை நீடித்தால் அடுத்த 75 ஆண்டுகளில்தான் அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை எட்ட முடியும் என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே நேரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 2047இல் வளர்ந்த பாரதம் என்ற கனவை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள உலக வங்கி, இந்தியா போன்ற இன்றைய நடுத்தர வருமான பொருளாதாரங்களால் அதை செய்ய முடிந்தால் ஆச்சரியம்தான் எனத் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய நிலையிலிருந்து மீண்டு வேகமான முன்னேற, "முதலில் கவனம் செலுத்துங்கள்; பின்னர் வெளிநாட்டில் இருந்து புதிய தொழில்நுட்பங்கள் உட்செலுத்துங்கள்; மற்றும், இறுதியாக, முதலீடு, உட்செலுத்துதல் மற்றும் புதுமை ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் ஒரு முப்பரிமாண மூலோபாயத்தை பின்பற்ற உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.