பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை
சீனா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிரான பண மோசடி வழக்கில், முதல் குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அரசு தரப்பு புகார் பதியப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைத் தவிர, விவோ இந்தியா நிறுவனம் குற்றவாளியாகப் சேர்க்கப்பட்டுள்ளது என இது குறித்து அறிந்தவர்கள் பிடிஐ இடம் தெரிவித்தனர். அமலாக்கத்துறை இந்த விசாரணையில் லாவா இன்டர்நேஷனல் மொபைல் நிறுவனத்தின் எம்.டி ஹரி ஓம் ராய், சீன குடிமகனான ஆண்ட்ரூ குவாங், பட்டய கணக்காளர்கள் நிதின் கர்க் மற்றும் ராஜன் மாலிக் ஆகியோரை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
₹62,476 கோடி சீனாவுக்கு மாற்றப்பட்டதாக
அமலாக்கத்துறை முன்னர் உள்ளூர் நீதிமன்றத்தின் முன் தனது ரிமாண்ட் ஆவணங்களில், நான்கு பேரின் செயல்பாடுகள் இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் எனவும், தவறான ஆதாயங்களைப் பெற விவோ இந்தியா நிறுவனத்திற்கு உதவியதாகவும் கூறியது. இது தொடர்பாக விவோ நிறுவனம் மற்றும் தொடர்புடைய நபர்களை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனையிட்ட அமலாக்கத்துறை, பண மோசடி கும்பலை கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது. இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக விவோ-இந்தியாவால் சீனாவுக்கு "சட்டவிரோதமாக" ₹62,476 கோடி மாற்றப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இருப்பினும் கைது செய்யப்பட்ட ராய், கடந்த 2014 ஆம் ஆண்டு விவோ மற்றும் லாவா நிறுவனங்களிடையே கூட்டுறவு ஏற்படுத்து முயன்றதாகவும், பண பரிமாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.