பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம்
இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) பாதுகாப்பு விதிமீறல்களுக்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது. ஏர் இந்தியா ஊழியர் ஒருவரின் தன்னார்வ பாதுகாப்பு அறிக்கையின் அடிப்படையில், நீண்ட தூர, நிலப்பரப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில வழித்தடங்களில், ஏர் இந்தியா விமான நிறுவனம் பாதுகாப்பு மீறல்களை செய்ததாகக் கூறி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்தார். "பாதுகாப்பு அறிக்கையைப் பெற்றதன் அடிப்படையில், கூறப்படும் மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை DGCA நடத்தியது" என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது DGCA
"விசாரணையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் விதிகளுக்கு இணங்கவில்லை என்பது தெரியவந்ததால், ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கணக்கு மேலாளருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஷோ காஸ் நோட்டீஸிற்கான பதில், தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) வகுத்த முக்கியமான ஆவணங்களில் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறன் வரம்புகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்டது," என்று DGCA அறிக்கை கூறுகிறது. "குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை/OEM செயல்திறன் வரம்புகளுக்கு இணங்கவில்லை என்பதால், DGCA அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. மேலும் ஏர் இந்தியா மீது ரூ. 1.10 கோடி அபராதம் விதித்துள்ளது" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.