ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான ஓப்போ, விவோ மற்றும் ஷாவ்மி ஆகிய நிறுவனங்கள், கடந்த நான்கு நிதியாண்டுகளில் ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மேற்கூறிய நிறுவனங்களின் வரி ஏய்ப்பு குறித்த தரவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். 2018-19 நிதியாண்டு முதல், கடந்த 2022-23 நிதியாண்டு வரை மேற்கூறிய சீன நிறுவனங்கள் ரூ.9,000 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கும் நிலையில், அவற்றில் ரூ.1,629 கோடி வரை மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், 2021-22ம் நிதியாண்டில் இந்தியாவில் சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாயானது ரூ.1.5 லட்சம் கோடியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வளவு வரி ஏய்ப்பு செய்திருக்கின்றன சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்?
அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, ஓப்போ நிறுவனமானது ரூ.4,403 கோடி சுங்க வரி ஏய்ப்பும், ரூ.683 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பும் செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விவோ நிறுவனமானது, ரூ.2,875 கோடி சுங்க வரி ஏய்ப்பும், ரூ.48.25 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பும் செய்திருக்கிறது. அதேபோல், மற்றொரு சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி, ரூ.682.51 கோடியை சுங்க வரியாகவும், ஜிஎஸ்டி வரியாக ரூ.168.63 கோடியும் வரி ஏய்ப்பு செய்திருக்கிறது. இத்துடன் சீன மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான லெனோவோவும், ரூ.42.36 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.