Loading...
நாஸ்டாக்கில் களமிறங்கும் ஆந்த்ரோபிக் ஐபிஓ: இந்திய முதலீட்டாளர்களின் அதீத ஆர்வத்தால் சவாலில் கிஃப்ட் சிட்டி வங்கி கட்டமைப்பு
ஆந்த்ரோபிக் ஐபிஓ வெளியீடு

நாஸ்டாக்கில் களமிறங்கும் ஆந்த்ரோபிக் ஐபிஓ: இந்திய முதலீட்டாளர்களின் அதீத ஆர்வத்தால் சவாலில் கிஃப்ட் சிட்டி வங்கி கட்டமைப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 19, 2026
05:51 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக் நவம்பர் 19 அன்று அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இதனால் இந்திய சில்லறை முதலீட்டாளர்களிடையே இந்நிறுவன பங்குகளை வாங்குவதற்கு பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் க்ரோ, அப்ஸ்டாக்ஸ், ஜெரோதா மற்றும் ஏஞ்சல் ஒன் ஆகிய பெரிய தரகு நிறுவனங்கள் அமெரிக்க பங்கு முதலீட்டு சேவையைத் தொடங்கியுள்ளன. இதனால் வழக்கமான வர்த்தக நாட்களை விடக் கடந்த வாரத்தில் மூன்று மடங்கு அதிகத் தேவை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக குஜராத் கிஃப்ட் சிட்டியின் சர்வதேச முதலீட்டு உள்கட்டமைப்பு பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது.

இந்திய முதலீட்டாளர்கள்

இந்திய முதலீட்டாளர்களுக்காக INDmoney அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீ-ஆர்டர் வசதி

அமெரிக்க ஐபிஓ நடைமுறைகளில் உள்நாட்டு நிதி நிறுவனங்களே நேரடியாக பங்கேற்க முடியும் என்பதால் இந்தியர்களால் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது.

இருப்பினும் நாஸ்டாக்கில் வர்த்தகம் தொடங்கியவுடன் பங்குகளை வாங்குவதற்கு INDmoney தளம் பிரத்யேக ப்ரீ-ஆர்டர் வசதியைத் தொடங்கியுள்ளது.

இது இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள 'ஆஃப்டர்-மார்க்கெட் ஆர்டர்' (AMO) போன்றதாகும்.

முதலீட்டாளர்கள் நிர்ணயித்த விலை வரம்பிற்குள் பங்குகள் கிடைத்தால் மட்டுமே இந்த ஆர்டர்கள் நிறைவேற்றப்படும்.

வர்த்தக விலை அதிகமாக இருந்தால் கொள்முதல் ரத்து செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாமதம்

கிஃப்ட் சிட்டி வழியாக நிதி சேர்ப்பதில் 2 முதல் 3 நாட்கள் வரை வங்கி ஒப்புதல் தாமதம்

அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதால் கிஃப்ட் சிட்டியின் வங்கி உள்கட்டமைப்பில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

பொதுவாக சில மணி நேரங்களில் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய பணத்திற்கு தற்போது வங்கி ஒப்புதல் கிடைக்க மூன்று நாட்கள் வரை ஆகிறது.

இதனால் வாடிக்கையாளர்களின் புகார்கள் அதிகரித்துள்ளதாகத் தரகு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 19 வர்த்தகத்தில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நிதியை சேர்க்குமாறு தரகு நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

அப்ஸ்டாக்ஸ் தளத்திலும் தினசரி ஆர்டர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ADVERTISEMENT

முந்தைய சாதனை

ஏஐ ஈக்கோசிஸ்டம் அமைப்பில் புதிய வாய்ப்பு மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் முந்தைய சாதனை

இதுவரை சிப் தயாரிப்பாளர்கள் மற்றும் கிளவுட் நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்து வந்த இந்தியர்களுக்கு ஆந்த்ரோபிக் ஒரு புதிய வாய்ப்பாகும்.

முன்னதாக எலான் மஸ்க் ஆதரவு பெற்ற ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட்டபோதும் இந்தியர்களிடம் இதேபோன்ற ஆர்வம் காணப்பட்டது.

வெஸ்டட் தளத்தின் மொத்த வர்த்தக அளவில் 15 சதவீதத்தையும் நிகர முதலீட்டில் 43 சதவீதத்தையும் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் ஈர்த்திருந்தன.

இருப்பினும் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தொடக்க விலை மற்றும் மதிப்பீட்டைப் பொறுத்தே உண்மையான முதலீட்டுப் பங்கேற்பு அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT