Loading...
இந்தியா உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமேசான் ஊழியர்கள் இன்று உலகளாவிய போராட்டம்
அமேசான் ஊழியர்கள் இன்று உலகளாவிய போராட்டம்

இந்தியா உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமேசான் ஊழியர்கள் இன்று உலகளாவிய போராட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2026
12:06 pm

செய்தி முன்னோட்டம்

குறைந்த ஊதியம் மற்றும் கடுமையான பணிச்சூழலைக் கண்டித்து, இந்தியா உட்பட உலகின் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அமேசான் நிறுவன ஊழியர்கள் இன்று மாபெரும் உலகளாவிய போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆண்டின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான விற்பனை வார இறுதி நாட்களான 'பிளாக் ஃப்ரைடே' தருணத்தில், அமேசான் கிடங்குகள், விநியோக நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக வேலைநிறுத்தங்கள், மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பின்னணி

'மேக் அமேசான் பே' பிரச்சாரத்தின் பின்னணி

சர்வதேச தொழிற்சங்க அமைப்பான யுனி குளோபல் யூனியன் மற்றும் புரோகிரஸிவ் இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள் இணைந்து 'மேக் அமேசான் பே' என்ற பெயரில் இந்த உலகளாவியப் போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளன.

உலகின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கான உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

போதுமான ஊதியம் வழங்கப்படாதது மற்றும் தொழிலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் பணி நடைமுறைகள் ஆகியவற்றிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

ஜெர்மனி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் போராட்டம்

இந்த உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஜெர்மனியில் உள்ள 11 அமேசான் மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ஊழியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

ஜெர்மனியில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கிய சேவைகள் தொழிற்சங்கம், "கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், சில்லறை வர்த்தகத் துறைக்கான கூட்டு ஒப்பந்தங்களை அங்கீகரிக்கவும், ஆரோக்கியமான பணிச்சூழலை உறுதி செய்யவும் அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மறுப்பு

குற்றச்சாட்டுகளை மறுத்த அமேசான் நிர்வாகம்

இதனிடையே, தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டுகளை ஜெர்மனியில் உள்ள அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஊழியர்களைக் கண்காணிக்க தாங்கள் எவ்வித டிஜிட்டல் கருவிகளையும் பயன்படுத்துவதில்லை என விளக்கமளித்துள்ள அவர், "தொழில்துறை வழக்கப்படி சரக்கு மேலாண்மை அமைப்பை மட்டுமே பயன்படுத்துகிறோம். சிறந்த செயல்முறைகள் மற்றும் தொலைநோக்குத் திட்டமிடல் காரணமாக எங்களது ஊழியர்களுக்குச் சமாளிக்கக்கூடிய அளவிலான பணிச்சுமையே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

வாக்குமூலங்கள்

ஊழியர்களின் வேதனை வாக்குமூலங்கள்

அமேசான் நிர்வாகத்தின் மறுப்புக்கு மாறாக, கிடங்குகளில் நிலவும் கடுமையான பணிச்சூழல் குறித்துப் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் வெளியிட்டுள்ள வாக்குமூலங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் உள்ள அமேசான் கிடங்கு ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளியில், "நிர்வாகம் எனது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறது; எத்தனை முறை தண்ணீர் குடிக்கிறேன், கழிவறைக்குச் செல்கிறேன் என்பது வரை கண்காணிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிரிட்டன் ஊழியர் ஒருவர் இந்த நுண்ணிய கண்காணிப்பு மனதை உடைப்பதாகவும், அமெரிக்க ஊழியர் ஒருவர் அமேசானில் பணிபுரிந்ததால் எண்ணற்ற மருத்துவர்களிடம் சிகிச்சை பெற நேரிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT