ஆந்திரா ஸ்பேஸ் சிட்டியில் ₹500 கோடி முதலீட்டில் புதிய ஆலை அமைக்கிறது சென்னை விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
சென்னை ஐஐடியில் உருவான விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்பேஸ் சிட்டியில் தனது புதிய தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. சுமார் ₹500 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் அமையவுள்ள இந்த ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆந்திர அரசுடன் கையெழுத்தாகியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் அமையும் இந்த மையம், கிழக்கு நோக்கிய பூமத்திய ரேகை விண்கல ஏவுதல்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கும்.
ஏஐ டேட்டா சென்டர்கள்
விண்வெளியில் ஏஐ டேட்டா சென்டர்களை உருவாக்கும் புதிய முயற்சி
பூமியில் டேட்டா சென்டர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான மின்சாரம் மற்றும் தண்ணீர் தேவையைக் குறைக்கும் வகையில், விண்வெளியில் டேட்டார் சென்டர்களை அமைக்கும் உலகளாவிய போட்டியில் அக்னிகுல் இணைந்துள்ளது.
இதற்காக கிளவுட் நிறுவனமான நீவ்கிளவுட் (NeevCloud) உடன் இணைந்து பூமியின் தாழ்வட்டப் பாதையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டேட்டா சென்டரை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான விண்கலங்கள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ளன.
அக்னிபான் ராக்கெட்
அக்னிபான் ராக்கெட்டின் மேல் நிலையை டேட்டா சென்டராக மாற்றும் தொழில்நுட்பம்
அக்னிகுல் நிறுவனத்தின் மறுபயன்பாட்டுத் திறன் கொண்ட அக்னிபான் ராக்கெட் தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இதன் கீழ் நிலை கடலில் உள்ள மிதவைத் தளத்தில் மீட்கப்படும் நிலையில், காப்புரிமை பெற்ற மேல் நிலையை (Extendable Upper Stage) விண்வெளியில் நீட்டித்து டேட்டா சென்டர்களைத் தாங்கும் தளமாக பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஒரு பயணத்திற்கு பிறகும் ராக்கெட்டின் மேல் பகுதி விண்வெளியில் தொடர்ந்து செயல்படும்.
தமிழ்நாடு
தமிழகம் மற்றும் ஆந்திரா திட்டங்களுக்கு இடையிலான செயல்பாட்டு ஒத்திசைவு
சென்னையை சேர்ந்த நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்வது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்த நிலையில், அக்னிகுல் நிறுவனம் இது குறித்து விளக்கமளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே 350 ஏக்கரில் அமைந்துள்ள தங்களது ஆலை துருவ சுற்றுப்பாதை (Polar Orbit) ஏவுதல்களுக்காகத் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் அமையும் புதிய ஆலை தமிழகத்தின் செயல்பாடுகளுக்குப் போட்டியாக இல்லாமல் பக்கபலமாகவே அமையும் என நிறுவனம் உறுதிபடக் கூறியுள்ளது.