இந்தியாவின் முதல் 'ஸ்டார்லைனர்' ட்ரோனை வெளியிட்டது அதானி குழுமம்
கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் 'ஸ்டார்லைனர்' ஆளில்லா வான்வழி வாகனத்தை(UAV) இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். த்ரிஷ்டி 10 'ஸ்டார்லைனர்' என்பது ஒரு மேம்பட்ட உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் வேவுபார்க்கும்(ISR) ஆளில்லா விமானமாகும். 36 மணிநேர சகிப்புத்தன்மையுடன் கூடிய இந்த ஆளில்லா விமானத்தில், 450 கிலோ பேலோட் திறன் உள்ளது. மேலும், இது STANAG 4671 சான்றிதழைக் கொண்ட ஒரே அனைத்து வானிலை இராணுவ ஆளில்லா விமானமாகும். கூடுதலாக, பிரிக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்படாத வான்வெளியில் பறக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் கவனம் செலுத்தி வரும் அதானி குழுமம்
ஐதராபாத்தில் உள்ள அதானி ஏரோஸ்பேஸ் பூங்காவில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு மிக்க நாடாக இந்தியாவை மாற்றவும், அந்த துறையில் உலகளவில் முன்னணிக்கு செல்லவும் அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் முயற்சி வருகிறது. இராணுவம் மற்றும் பிற துணை ராணுவப் படைகளை ஆதரிக்கும் திறன்களை கொண்ட சிறிய ஆயுதங்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், ரேடார்கள், பாதுகாப்பு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஏவியோனிக்ஸ், தந்திரோபாய தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிகல் அமைப்புகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏற்கனவே தனது திறமையை அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் காட்டியுள்ளது.