2024-ல் புதிய 'SU7' எலெக்ட்ரிக் செடானை அறிமுகப்படுத்தவிருக்கும் ஷாவ்மி
செய்தி முன்னோட்டம்
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி (Xiaomi), புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை தயாரித்து வருவதாக நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எலெக்ட்ரிக் கார் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
'SU7' எனப் பெயரிடப்பட்டிருக்கும் ஷாவ்மியின் புதிய செடான் குறித்த தகவல்களே தற்போது வெளியாகியிருக்கின்றன. சீனாவில் 2024ம் ஆண்டின் முதல் பாதியில் இந்த முழுமையான எலெக்ட்ரிக் காரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஷாவ்மி.
சீனாவில் விற்பனையாகி வரும் பிஎம்டபிள்யூ i4 மற்றும் டெஸ்லா மாடல் 3 ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்தக் காரை அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
எலெக்ட்ரிக் கார்
ஷாவ்மியின் புதிய SU7 செடான்:
இரண்டு பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் புதிய SU7-ஐ சீன ஆட்டோமொபைல் சந்தையில் களமிறக்கவிருக்கிறது ஷாவ்மி.
முதலாவது 299hp பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்ட, அதிகபட்சமாக 210கிமீ வேகத்தில் செல்லக்கூடிய ரியர்வீல் டிரைவ் அடிப்படை மாடல்.
மற்றொன்று, 673hp பவரை வெளிப்படுத்தக்கூடிய இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களைக் கொண்ட, அதிகபட்சமாக 265கிமீ வேகம் வரை செல்லும் திறனுடைய 4-வீல் டிரைவ் மாடல்.
அடிப்படை மாடலில் LFP பேட்டரியையும், டாப் எண்டில் CATL பேட்டரியையும் ஷாவ்மி பயன்படுத்தவிருப்பதாகத் தெரிகிறது. எனினும், ரேஞ்சு மற்றும் பேட்டரி விபரங்கள் தெளிவாக வெளியாகவில்லை.
ஷாவ்மி
ஷாவ்மியின் எலெக்ட்ரிக் வாகனத் திட்டம்:
ஷாவ்மியின் முதல் எலெக்ட்ரிக் காரை, ஒப்பந்த அடிப்படையில் சீனாவைச் சேர்ந்த BAIC ஆட்டோமொபைல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.
மேற்கூறிய SU7 எலெக்ட்ரிக் செடான் மட்டுமின்றி, மேலும் நான்கு எலெக்ட்ரிக் கார் மாடல்களை தங்கள் உருவாக்க மற்றும் வெளியீட்டு லைன்அப்பில் வைத்திருக்கிறது ஷாவ்மி.
அடுத்த ஆண்டு இந்த SU7 செடானின் வெளியீட்டைத் தொடர்ந்து, 2025ம் ஆண்டு புதிய எஸ்யூவி ஒன்றையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தைக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.
எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டிற்காக கடந்த ஆண்டே இந்திய மதிப்பில் ரூ.3,700 கோடி வரை ஷாவ்மி ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அந்நிறுவனம் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.