இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் 'டாடா பன்ச் EV'
இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறிய எரிபொருள் எஸ்யூவியான பன்ச் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா நிறுவனம் உருவாக்கி வருவதாகப் பல மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், விரைவில் வெளியிடப்படவிருப்பதாகக் கூறப்படும் இந்த எலெக்ட்ரிக் பன்ச் மாடலின், கிட்டத்தட்ட தயாரிப்பு வடிவமானது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போது ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது. இந்த ஸ்பை ஷாட்களின் மூலம், டாடா பன்ச் எலெக்ட்ரிக் மாடலின் வெளிப்புற டிசைன் மற்றும் சில இதர தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிட்ரன் eC3 மாடலுக்குப் போட்டியாக, ரூ.10 லட்சம் விலைக்குள் இந்த பன்ச் எலெக்ட்ரிக் மாடலை டாடா அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா பன்ச் EV: டிசைன் மாற்றங்கள்
எரிபொருள் பன்சில் இருந்து தனித்துத் தெரியும் வகையில் பல்வேறு டிசைன் மாற்றங்களைப் பெற்றிருக்கிறது பன்ச் EV. முக்கியமாக சார்ஜிங் போர்ட்டானது முன்பக்க பம்பரில் இடம்பெறும் வகையில் வடிவமைத்திருக்கிறது டாடா. காரின் முன்பக்க ஹூடு முழுவதும் நீளும் எல்இடி DRL, மறுவடிவம் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டனா மற்றும் உயர்த்தி வைக்கப்பட்ட ஸ்டாப் லைட் ஆகியவை குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்களாக இருக்கின்றன. பின்பக்க வீல்களில் டிஸ்க் பிரேக்கை பெற்றிருக்கும் டாடா பன்ச் EV-யில், 360 டிகிரி கேமராவையும் அந்நிறுவனம் கொடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டியாகோ EV-யில் பயன்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக்கையே சிறிய மாற்றங்களுடன் பன்ச் EV-யில் டாடா பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.