வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யாதீர்கள்- வெடித்து சிதறும் அபாயம்!
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் கன மழையை கொட்டி தீர்த்தது. இப்புயல் சென்னைக்கு கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத மழை பொழிவை வழங்கியதால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை, நாம் கண்டறிந்த உடன் அது இயங்குகிறதா என ஸ்டார்ட் செய்து பார்க்க தோன்றும், ஆனால் அதை செய்யக்கூடாது என ஆட்டோமொபைல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கார், டூவீலர்கள் மற்றும் பிற வாகனங்கள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதால், காரில் உள்ள எரிபொருள் டேங்க், ஏர் ஃபில்டர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நீர் புகுந்திருக்கும்.
வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களில் என்னவெல்லாம் செய்யக்கூடாது?
அதை அப்படியே ஸ்டார்ட் செய்தால், வெள்ள நீர் காரின் என்ஜினுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இது என்ஜினை செயலிழக்க செய்யலாம். மேலும், வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களின், பேட்டரி இணைப்பை துண்டிக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பேட்டரி இணைப்பு துண்டிக்கப்படாத போது, மின் கசிவு ஏற்பட்டு வாகனத்தில் மின்சாரம் பரவ வாய்ப்புள்ளது. மின்கசிவு ஏற்பட்டிருக்கும் போது, வாகனத்தை நீங்கள் ஸ்டார்ட் செய்ய முயற்சித்தால், வாகனம் வெடித்து சிதறும் அபாயமும் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பூஞ்சை மற்றும் மற்றும் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்க வாகனங்களின் கதவை திறந்து வைக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இறுதியாக, இயந்திர வல்லுனரின் உதவியுடன் மட்டுமே நீங்கள் வெள்ளத்தில் சிக்கிய உங்கள் வாகனங்களை சரிசெய்ய முயல வேண்டும்.