மிகவேகமாக 4 லட்சம் கார்கள் விற்பனை செய்து டாடா பஞ்ச் எஸ்யூவி சாதனை
டாடா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களில் ஒன்றான பஞ்ச் மிக வேகமாக 4 லட்சம் யூனிட் விற்பனை மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. ஜூலை 2024 ஆட்டோமொபைல் விற்பனை புள்ளி விபரங்கள் வெளியான நிலையில், டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதன் விற்பனையின் பெரும்பகுதியை நெக்ஸான் மற்றும் பஞ்ச் ஆகியவை கொண்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் பஞ்ச் உள்நாட்டு எஸ்யூவிக்கான மற்றொரு சாதனையையும் படைத்துள்ளது. அதாவது இந்த வாகனம் இந்தியாவில் அக்டோபர் 2021இல் வெளியிடப்பட்டதில் இருந்து 4 லட்சம் விற்பனை மைல்கல்லை மிக வேகமாக 34 மாதங்களில் எட்டியுள்ளது.
டாடா பஞ்ச் எஸ்யூவி சிறப்பம்சங்கள்
டாடா பஞ்ச் அதன் வடிவமைப்பு, மென்மையான சவாரி திறன்களுக்காக வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. பஞ்ச் முழு 5-நட்சத்திர உலகளாவிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. மேலும், பஞ்சின் எலக்ட்ரிக் மாடல் பாரத் என்சிஏபியின் வசதியில் 5-நட்சத்திர விபத்து மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. விலையைப் பற்றி கூறுகையில், பஞ்சின் ஆரம்ப விலை ₹6.13 லட்சம் ஆகும். இது அதிகபட்சமாக எக்ஸ்-ஷோரூம் விலை ₹10.20 லட்சம் வரை கொண்டுள்ளது. வெறும் 10 மாதங்களில் 1 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டிய முதல் எஸ்யூவி என்ற பெருமையும் பஞ்ச் கொண்டுள்ளது. அன்றிலிருந்து, அடுத்த 9 மாதங்களில் 2 லட்சம் மைல்கல்லையும், அதைத் தொடர்ந்து 7 மாதங்களில் 3 லட்சம் மைல்கல்லையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.