நான்கு கியர்பாக்ஸ் தேர்வுகளைப் பெறவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல்
இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விரைவில் வெளியிடவிருக்கிறது டாடா. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்பக்க படங்கள் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது இந்த மாடலின் பவர்ட்ரெயின் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியிருக்கின்றன. வெளிப்பக்கம், ஸ்பிளிட் முகப்பு விளக்குகள், பின்பக்கம் முழுவதும் நீண்டிருக்கும் வகையிலான LED டெயில்லைட் மற்றும் புதிய டூயல் டோன் அலாய் ஆகியவை கவனிக்கத்தக்க மாற்றங்கள். உள்பக்கம், முற்றிலும் மறுவடிவம் செய்யப்பட்ட டேஷ்போர்டு, பெரிய டச்ஸ்கிரீன், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல்களைக் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டில் கொடுத்திருக்கிறது டாடா.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்: இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
தற்போதைய நெக்ஸானில் கொடுக்கப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களையே புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டிலும் பயன்படுத்தியிருக்கிறது டாடா. ஆனால், தற்போதைய டர்போ பெட்ரோல் மாடலில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டில் கூடுதலாக, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களை வழங்கியிருக்கிறது டாடா. எனவே, புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்டானது மொத்தம், 4 கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகவிருக்கிறது. இந்தப் புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டை அடுத்த மாதம் டாடா அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.