பெட்ரோல் என்ஜினுடன் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களை களமிறங்குகிறது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி வாகனங்களை பெட்ரோல் என்ஜினுடன் விரைவில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், டாடா சமீபத்தில் சஃபாரி மற்றும் ஹாரியரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகளை அறிமுகப்படுத்தியது. இதில் நிறுவனத்தின் சோதனை செய்யப்பட்ட 2.0 லிட்டர் கைரோடெக் டர்போ டீசல் என்ஜின் இடம் பெற்றிருந்தது. எனினும், ஹாரியர் மற்றும் சஃபாரியின் போட்டியாளர்களான மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ-என், ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கஸார் மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகியவை பெட்ரோல் மற்றும் என்ஜின் விருப்பங்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் வகையில் வழங்குகிறது.
டீசல் என்ஜினுக்கு மாற்றாக டாடா பெட்ரோல் என்ஜினை களமிறக்குவதன் பின்னணி
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா கூறுகையில், புதிய பெட்ரோல் என்ஜின் உருவாக்கத்தில் உள்ளது என்றும் எதிர்காலத்தில் இந்த மாடல்களில் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார். இதுவரை டீசல் என்ஜினை தேர்வு செய்ததற்கான காரணத்தை விளக்கிய சந்திரா, சஃபாரி மற்றும் ஹாரியர் இயங்கும் சந்தையில் 80 சதவீதம் டீசல் என்ஜின்களை நோக்கி சாய்ந்துள்ளது என்றார். அதேநேரத்தில் 20 சதவீத சந்தை பெட்ரோல் என்ஜின்களுடன் உள்ளதால், அந்த சந்தையிலும் களமிறங்கும் வகையில் நாங்கள் 1.5 லிட்டர் ஜிடிஐ என்ஜினில் வேலை செய்கிறோம் என்று சந்திரா மேலும் கூறினார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களை முறையே ₹15.49 லட்சம் மற்றும் ₹16.19 லட்சம் முதல் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது.