LOADING...
கோடையில் கார் என்ஜின் ஓவர் ஹீட் ஆகுதா? கூலண்ட் மற்றும் ரேடியேட்டர் பராமரிப்புக்கான 5 கோல்டன் டிப்ஸ்
கூலண்ட் மற்றும் ரேடியேட்டர் பராமரிப்புக்கான 5 கோல்டன் டிப்ஸ்

கோடையில் கார் என்ஜின் ஓவர் ஹீட் ஆகுதா? கூலண்ட் மற்றும் ரேடியேட்டர் பராமரிப்புக்கான 5 கோல்டன் டிப்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 22, 2026
07:02 pm

செய்தி முன்னோட்டம்

கோடை காலம் தொடங்கிவிட்டாலே மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் கடும் சோதனை ஆரம்பமாகிவிடும். குறிப்பாக, 40°C க்கும் அதிகமான வெயிலில் காரைச் செலுத்தும்போது, என்ஜினின் வெப்பம் கட்டுக்கடங்காமல் போக வாய்ப்புள்ளது. ஒரு காரின் என்ஜின் மிகச் சரியாக இயங்குவதற்கு அதன் குளிரூட்டும் அமைப்பு (Cooling System) சீராக இருக்க வேண்டியது அவசியம். இதில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

#1

கூலண்ட் அளவு மற்றும் தரம்

என்ஜினின் வெப்பத்தை உறிஞ்சி ரேடியேட்டருக்குக் கொண்டு செல்லும் வேலையைக் கூலண்ட் செய்கிறது. கூலண்ட் டேங்கில் 'Min' மற்றும் 'Max' அளவுகள் இருக்கும். எப்போதும் திரவம் பாதியளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றுவது என்ஜினுக்குள் துருவை உண்டாக்கும். எனவே, சரியான விகிதத்தில் (பொதுவாக 50:50) கூலண்ட் மற்றும் நீர் கலந்த கலவையைப் பயன்படுத்த வேண்டும்.

#2

ரேடியேட்டர் பராமரிப்பு

ரேடியேட்டரில் உள்ள சிறிய துளைகளில் தூசி, காய்ந்த இலைகள் அல்லது பூச்சிகள் அடைத்துக் கொண்டால், காற்று உள்ளே செல்ல முடியாமல் என்ஜின் வெப்பமடையும். கோடை தொடங்கும் முன் மென்மையான நீர் அழுத்தத்தைக் கொண்டு ரேடியேட்டரைச் சுத்தம் செய்வது நல்லது. ரேடியேட்டர் மூடியில் உள்ள ரப்பர் சீல் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அழுத்தம் கசிந்தால் கூலண்ட் சீக்கிரம் கொதித்து வெளியேறிவிடும்.

Advertisement

#3

ஹோஸ் பைப் மற்றும் பெல்ட்கள்

அதிகப்படியான வெப்பம் காரில் உள்ள ரப்பர் பாகங்களை விரிவடையச் செய்து, விரிசல்களை உண்டாக்கும். கூலண்ட் செல்லும் ரப்பர் குழாய்களில் மெல்லிய விரிசல்கள் இருந்தால், அழுத்தத்தின் காரணமாக அவை வெடிக்கக்கூடும். என்ஜின் கூலிங் ஃபேனை இயக்கும் பெல்ட் தளர்வாகவோ அல்லது தேய்மானத்துடனோ இருந்தால், போதிய காற்று என்ஜினுக்குக் கிடைக்காது.

Advertisement

#4

என்ஜின் ஆயில் தரம்

என்ஜின் ஆயில் வெறும் உயவுப் பொருளாக மட்டுமல்லாமல், வெப்பத்தைக் கடத்தும் காரணியாகவும் செயல்படுகிறது. பழைய ஆயில் அதிக வெப்பத்தில் தன் அடர்த்தியை இழந்துவிடும். இதனால் என்ஜின் பாகங்களுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு கூடுதல் வெப்பம் உருவாகும். எனவே, கோடைக்கு முன்னரே ஆயிலை மாற்றுவது புத்திசாலித்தனம்.

#5

ஏசி சிஸ்டம் மற்றும் கேபின் வெப்பம்

என்ஜின் வெப்பமடைவதற்கும் ஏசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏசி கம்ப்ரஸர் இயங்கும்போது என்ஜினுக்குக் கூடுதல் சுமை ஏற்படும். காரை ஸ்டார்ட் செய்த உடனே ஏசி போடாமல், ஜன்னல்களைத் திறந்து வைத்து உள்ளே இருக்கும் வெப்பக் காற்றை வெளியேற்றிய பிறகு ஏசி போடவும். இது என்ஜினின் சுமையைக் குறைக்கும்.

ஓவர் ஹீட்

நடுரோட்டில் என்ஜின் ஓவர் ஹீட் ஆனால் என்ன செய்வது?

ஏசியை அணைக்கவும்: உடனடியாக ஏசியை அணைத்துவிட்டு, காரை ஓரமாக நிறுத்தவும். என்ஜினை ஆஃப் செய்ய வேண்டாம்: சில நிமிடங்கள் 'ஐட்லிங்' நிலையில் வைத்தால் கூலண்ட் சுழற்சி ஏற்பட்டு வெப்பம் குறையும் (புகை வராத பட்சத்தில்). ரேடியேட்டர் மூடியைத் திறக்காதீர்கள்: என்ஜின் சூடாக இருக்கும்போது மூடியைத் திறந்தால், கொதிக்கும் நீர் உங்கள் முகம் மற்றும் கைகளில் தெறிக்க வாய்ப்புள்ளது. குறைந்தது 30 நிமிடம் காத்திருக்கவும்.

Advertisement