டோல் கட்டண விதிகளில் புதிய மாற்றங்கள்; 20 கிமீ தூரத்திற்கு கட்டணம் ஏதுமில்லை
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பிற்காக வாகன ஓட்டிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவது நடைமுறை. இதற்காக குறிப்பிட்ட தூரத்தில் டோல் பிளாசாக்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் பணம் அல்லது கார்டு மூலம் வசூலிக்கப்பட்டு வந்து சுங்கக்கட்டணம், காத்திருப்பு நேரத்தை குறைக்கும் பொருட்டும், முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டும் தற்போது ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் வசூல் செய்யப்படும் கட்டணத்திற்கு ஏற்ப சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை எனவும், தூரம் குறைவாக இருப்பினும் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் தற்போது சுங்க கட்டண வசூலில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
20 கிலோ மீட்டருக்கு கட்டணமில்லா பயணம்
வாகனங்களில் ஆன்-போர்டு யூனிட் பொருத்தப்படவுள்ளது. இதனால் அந்த வாகனங்கள் செல்லும் தூரம் கணக்கிட முடியும். சுங்க கட்டண சாலைகளில் முதல் 20 கிலோ மீட்டருக்கு பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் தினமும் 20 கிலோமீட்டர் வரை கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படும் வகையில் புதிய உத்தரவை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வாகனம் 20 கிலோ மீட்டர் தாண்டி பயணிக்கும் துாரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, பாஸ்டேக் போலவே, வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.