ஐரோப்பாவில் புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரியை சோதனை செய்து வரும் மாருதி
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் eVX என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி நிறுவனம். தற்போது இந்த மாடலை ஐரோப்பிய நாடுகளில் மாருதி நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மாருதி சுஸூகி நிறுவனமானது 2024-ல் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவிருப்பதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. தயாரிப்புக்கு ஏற்ற வகையில் இந்த eVX மாடலை வடிவமைத்து அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்நிறுவனம் முதலில் சர்வதேச சந்தையிலும், பின்னர் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரை டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வருகிறது மாருதி.
மாருதி சுஸூகி eVX கான்செப்ட்: என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்?
பேட்டரி எலெக்ட்ரிக் மாடலான புதிய காரை இந்தியாவின் குஜராத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது மாருதி. பாக்ஸி டிசைன், மினிமலிஸ்டிக்கான டேஷ்போர்டு, நல்ல இடவசதியுடன் கூடிய கேபினோடு இந்த புதிய எலெக்ட்ரிக் காரை மாருதி உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ்அப் டிஸ்பிளே மற்றும் ADAS வசதிகளும் புதிய காரில் கொடுக்கப்படலாம். இரண்டு மோட்டார்கள், 60kWh பேட்டரி பேக்குடன் மாருதியின் புதிய எலெக்ட்ரிக் காரானது 550கிமீ ரேஞ்சைக் கொண்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் ரூ.18 முதல் 20 லட்சம் விலைக்குள் அந்நிறுவனம் வெளியிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.