மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்திறன்; 5-ஸ்டார் குளோபல் என்சிஏபி ரேட்டிங் பெற்றது மாருதி சுசுகி டிசையர் 2024
மாருதி சுஸூகி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் செடான் மாடல் காரான டிசையரின் தனது நான்காம் தலைமுறை பதிப்பை நவம்பர் 11ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலுக்கான முன்பதிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாதுகாப்பு, எரிபொருள் திறன் மற்றும் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இது கொண்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 டிசைரின் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் அதன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தரங்கள் ஆகும். இது குளோபல் என்சிஏபி (NCAP) ஆல் சமீபத்தில் சோதிக்கப்பட்டது. அதில், டிசையர் மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கான 5-நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான 4-நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றது.
மேம்படுத்தப்பட்ட டிசையர் மாடலின் சிறப்பம்சங்கள்
மாருதி சுஸூகியின் உருவாக்கத் தரம் குறித்த கடந்தகால கவலைகளை இந்த என்சிஏபி தர மதிப்பீடு நிவர்த்தி செய்கிறது. இதற்கிடையே, புதிய டிசையர் மேனுவல் வகைக்கு பெட்ரோல் லிட்டருக்கு 24.79 கிலோமீட்டர் மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வகைக்கு லிட்டருக்கு 25.71 கிலோமீட்டர் மைலேஜையும், சிஎன்ஜி மாடல்களுக்கு கிலோவுக்கு 33.73 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்குகிறது என்று மாருதி சுஸூகி கூறுகிறது. இது எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ+ என நான்கு முக்கிய டிரிம்களில் கிடைக்கும். எல்எக்ஸ்ஐ தவிர மற்ற அனைத்திற்கும் ஆட்டோமேட்டிக் விருப்பம் கிடைக்கும். சிஎன்ஜி விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ டிரிம்களில் வழங்கப்படும். டிசைரின் புதுப்பிக்கப்பட்ட அழகியல், ஐரோப்பிய-உந்துதல் கொண்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது வாங்குபவர்களுக்கு காம்பாக்ட் செடான் பிரிவில் நவீன மற்றும் ஸ்டைலான தேர்வை வழங்குகிறது.