2026-ல் நான்காவது முறையாக கார்கள் விலையை உயர்த்தியது மாருதி சுஸூகி: இன்று முதல் புதிய விலை அமல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட், 2026 ஆம் ஆண்டில் நான்காவது முறையாகத் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட கார் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் இந்நிறுவனம் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கான சராசரி விலை உயர்வு சுமார் 0.31 சதவீதமாக இருக்கும் என்றும், இந்த புதிய விலை உயர்வு நவம்பர் 22, 2026 முதலே நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவிற்கான காரணம்
மூலப்பொருள் மற்றும் பணவீக்க அழுத்தங்களை சமாளிக்க எடுக்கப்பட்ட முடிவு
செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தபோதிலும், சந்தையில் நீடிக்கும் பணவீக்கம் மற்றும் உள்ளீட்டுச் செலவு அழுத்தங்களால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் செலவு உயர்வின் ஒரு பகுதியை மட்டுமே சந்தைக்கு மாற்றுவதாக மாருதி சுஸூகி விளக்கமளித்துள்ளது.
4-வது முறை
ஜூன், ஆகஸ்ட், செப்டம்பரைத் தொடர்ந்து 2026-ல் 4-வது முறை விலை உயர்வு
உற்பத்திச் செலவுகளை ஈடுகட்ட மாருதி சுஸூ கி நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் இதற்கு முன்பு மூன்று முறை கார்கள் விலையை உயர்த்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ₹30,000 வரையிலும், ஆகஸ்ட் மாதத்தில் அரீனா மற்றும் நெக்ஸா மாடல்களுக்கு ₹30,000 வரையிலும் விலை உயர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு ₹20,000 வரை விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகர லாபம் சரிவு
Q2 FY27 காலாண்டில் வருவாய் 26% உயர்ந்தபோதிலும் நிகர லாபம் 26.9% சரிவு
2027 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மாருதி சுசுகியின் வருவாய் 26 சதவீதம் உயர்ந்து ₹53,340 கோடியாக அதிகரித்தபோதிலும், நிகர லாபம் 26.9 சதவீதம் சரிந்து ₹2,415 கோடியாகப் பதிவாகியுள்ளது.
செயல்பாட்டு லாபம் 6.3 சதவீதம் குறைந்து ₹4,764 கோடியாக உள்ள நிலையில், லாப வரம்பு கடந்த ஆண்டின் 12 சதவீதத்திலிருந்து 8.9 சதவீதமாகச் சுருங்கியுள்ளது.
மேலும் இதர வருமானம் ₹966 கோடியிலிருந்து ₹430 கோடியாகக் குறைந்ததும் நிதிநிலை முடிவுகளில் எதிரொலித்துள்ளது.