'eVX' கான்செப்ட் எலெக்ட்ரிக் காரின் தயாரிப்பு வடிவத்தை சோதனை செய்து வரும் மாருதி?
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில், தங்களுடைய புதிய eVX எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி. தற்போது அந்த மாடலை இந்திய சாலைகளில் அந்நிறுவனம் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதே மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலாந்திலும் சோதனை செய்து வந்தது அந்நிறுவனம். இந்த eVX மாடலின் தயாரிப்பு நிலைக்கு அருகில் இருக்ககூடிய வெர்ஷன் ஒன்றையும் சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி. டொயோட்டாவின் 40PL எலெக்ட்ரிக் ஸ்கேட்போர்டு கட்டமைப்பிலிருந்து உருவாக்கப்பட்ட தளத்தையே புதிய eVX மாடலுக்குப் பயன்படுத்தியிருக்கிறது மாருதி சுஸூகி. மேலும், குஜராத்தில் உள்ள தொழிற்சாலையிலேயே புதிய காரை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
மாருதி சுஸூகி eVX எலெக்ட்ரிக் கார்:
eVX கான்செப்ட் காரில் பயன்படுத்தியிருந்த டிசைனையே இறுதி மாடலுக்கும் மாருதி பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்செப்ட் மாடலில் 60kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சோதனை செய்து வரும் மாடலில் 48kWh பேட்டரியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், கான்செப்ட் eVX மாடாலனது 550 கிமீ ரேஞ்சைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தயாரிப்புக்கு அருகிலிருக்கக்கூடிய மாடலானது 400 கிமீ ரேஞ்சையே கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த எலெக்ட்ரிக் காரினை, ரூ.18 முதல் ரூ.22 வரையிலான விலையில் மாருதி சுஸூகி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா EV, டாடா நெக்ஸான்.ev மற்றும் மஹிந்திரா XUV400 உள்ளிட்ட எலெக்ட்ரிக் மாடல்களுக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியாகவிருக்கிறது புதிய மாருதி சுஸூகி eVX.