கார்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வாகன உற்பத்தியாளர்கள் முடிவு
அரசாங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் அழுத்தம் அதிகரித்து வருவதால், வாகன உற்பத்தியாளர்கள் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தில்லாத வகையில், புதுமையான யோசனைகளை முயற்சித்து வருகின்றனர். அந்த உத்தியின் ஒரு பகுதியாக, ஹோண்டா, டொயோட்டா மற்றும் நிசான் போன்ற வாகன நிறுவனங்கள் தங்கள் புதிய வாகனங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த முடிவு செய்துள்ளன. இதன்படி , பழைய வாகனங்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கைப் பெறுவதற்காக விநியோகச் சங்கிலியை உருவாக்கவும் இவை முடிவு செய்துள்ளன. இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இது புதிய மாடல்களில் பயன்படுத்தப்படும். புதிய ஐரோப்பிய விதிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.
பிளாஸ்டிக் விதிமுறைகளை கடினமாக்கியுள்ள ஐரோப்பிய ஒன்றியம்
கார்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் 2023இல் கடுமையான விதிமுறைகளை முன்மொழிந்தது. இதன் கீழ் ஒரு புதிய வாகனத்தின் மொத்த பிளாஸ்டிக் பாகங்களில் குறைந்தது 25 சதவிகிதம் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை 2031ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த விதிக்கு இணங்காத புதிய வாகனங்களை ஐரோப்பிய யூனியன் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மறுசுழற்சிக்கு நிறுவனங்கள் கட்டாயமாக தள்ளப்பட்டுள்ள நிலையில், மறுசுழற்சி செய்வதால் உதிரிபாகங்களின் விலை கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக நேரிடும் என்பதால், விற்பனை வீழ்ச்சிக்கும் வித்திடலாம் எனக் கூறப்படுகிறது.