மலிவான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு குறைவு என்பது தான், எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசுகள் முன்வைக்கும் முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'கம்பேர் தி மார்க்கெட்' என்ற தளம், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் எந்தளவிற்கு மலிவான பயன்பாட்டை வழங்குகின்றன என்பது குறித்த தகவல்களை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. மேலும், உலக நாடுகளுள் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு ஆகும் செலவுகளையும் தொகுத்து, அவற்றில் எந்தெதந் நாடுகள் மலிவான எலெக்ட்ரிக் சார்ஜிங்கை வழங்குகின்றன என்ற தகவல்களையும் அளித்திருக்கிறது அந்நிறுவனம்.
மலிவான எலெக்ட்ரிக் சார்ஜிங்கை அளிக்கும் நாடுகள்:
மலிவான எலெக்ட்ரிக் கார் சார்ஜிங் வசதிகளை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் அர்ஜென்டினா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம்பிடித்திருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனத்தைச் சார்ஜ் செய்தற்கு இந்தியாவிர் 231 ரூபாய் செலவாகிறது. முதலிடத்திலிருக்கும் அர்ஜென்டினாவில் இந்த மதிப்பு ரூ.113 ஆகவும், மலேசியாவில் ரூ.157 ஆகவும் இருக்கிறது. அதேபோல், விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார் சார்ஜிங் வசதிகளை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன டென்மார்க்கும், இத்தாலியும். அதனைத் தொடர்ந்து, ஜெர்மனி, பெல்ஜியம், லித்துவானியா ஆகிய நாடுகள் இடம் பிடித்திருக்கின்றன. டென்மார்க் மற்றும் இத்தாலியில் ஒரு எலெக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு ரூ.1,823 செலவாகிறது. ஜெர்மனியில் இந்த மதிப்பு ரூ.1,754-கவும், பெல்ஜியத்தில் ரூ.1,651-கவும் இருக்கிறது.
எப்படி கணக்கிடப்பட்டது?
இந்த தகவல் தொகுப்பிற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா கார் மாடலை பயன்படுத்தியிருக்கிறது 'கம்பேர் தி மார்க்கெட்' தளம். இந்த கோனா மாடலை, பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு வேரியன்டகளிலும் விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கோனா கார் மாடலை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கோனாவின் முந்தைய தலைமுறை எலெக்ட்ரிக் கார் மாடலானது இந்தியாவில் விற்பனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த மாடலை மேற்கூறிய தகவல் தொகுப்பிற்காக எடுத்துக் கொண்டிருக்கிறது கம்பேர் தி மார்கெட் தளம். மேற்கூறிய சார்ஜிங் செலவுத் தகவல்கள் யாவும், இந்த கோனா எலெக்ட்ரிக் கார் மாடலை முழுமையாக சார்ஜ் செய்ய ஆகும் செலவே.
ஹூண்டாய் கோனா:
கோனா எலெக்ட்ரிக் மாடலில், 139hp பவரை உற்பத்தி செய்யக்கூடிய மோட்டாரை வழங்கியிருக்கிறது ஹூண்டாய். மேலும், 39.2kWh பேட்டரியையும் கோனா எலெக்ட்ரிக் மாடலில் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். கோனா மாடலின் பெட்ரோல் வேரியன்டில், நான்கு சிலிண்டர்கள் கொண்ட 148hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 2,0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஹூண்டாய். இந்தத் தகவல் தொகுப்பிற்கு ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ள, ரேஞ்சு மற்றும் மைலேஜ் தகவல்களையே அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கிறது கம்பேர் தி மார்க்கெட் தளம். நிகழ்நேரத் தகவல்கள் மேற்கூறிய தொகுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சற்று மாறுபடலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது அத்தளம்.
எவ்வளவு மலிவான பயணத்தை வழங்குகின்ற எலெக்ட்ரிக் வாகனங்கள்?
மேற்கூறிய தகவல்களின்படி, இந்தியாவில் எலெக்ட்ரிக் காரின் மூலம் 100 கிமீ பயணம் செய்வதற்கு வெறும் 76 ரூபாயே செலவாகிறது. இதுவே, குறிப்பிட்ட எலெக்ட்ரிக் காருக்கு இணையான பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலில் 647 ரூபாய் செலவாகிறது. இதனால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத்தை தினசரிப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் போது, எரிபொருள் செலவில் 88.26 சதவிகிதத்தை நாம் சேமிக்க முடியும். மேலும், எலெக்ட்ரிக் வாகனத்தை பராமரிக்கும் செலவும் மிகவும் குறைவு தான். பொதுவாக அனைத்து நாடுகளையும் ஒப்பிட்டதில், ஐரோப்பிய நாடுகளிலேலே எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான செலவு மிகவும் அதிகமாகவும், ஆசிய நாடுகளில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் செலவு குறைவாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.