Loading...
இந்தியாவில் மின்சார கார்கள் விற்பனை 76.47% உயர்வு: FADA தரவுகளுடன் முதலிடத்தில் டாடா
76.47 சதவீதம் என்ற வியத்தகு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது Tata EV

இந்தியாவில் மின்சார கார்கள் விற்பனை 76.47% உயர்வு: FADA தரவுகளுடன் முதலிடத்தில் டாடா

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
08:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் மின்சாரப் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த அக்டோபர் 2026-இல் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 76.47 சதவீதம் என்ற வியத்தகு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 37,049 மின்சாரக் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலத்தில் இந்த விற்பனை அளவு 20,995 அலகுகளாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ்

விற்பனையில் டாடா மோட்டார்ஸ் முதலிடம்

இந்திய மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.

அக்டோபரில் 14,669 அலகுகளை விற்பனை செய்து சந்தையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 77.61% வளர்ச்சியாகும்.

மஹிந்திரா, 8,538 அலகுகள் விற்பனையுடன் 85.65% மாபெரும் ஆண்டு வளர்ச்சியப் பதிவு செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

JSW எம்பி மோட்டார், 5,939 அலகுகளை விற்பனை செய்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த செப்டம்பரை விட 13.30% மற்றும் கடந்த ஆண்டை விட 10.80% அதிகமாகும்.

பிற நிறுவனங்கள்

வியப்பூட்டும் வளர்ச்சியில் வின்ஃபாஸ்ட் & பிற நிறுவனங்கள்

வியட்நாம் நாட்டின் மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட், இந்தியாவில் கடந்த மாதத்தில் 2,571 அலகுகளை விற்பனை செய்து நாட்டின் 4-ஆவது பெரிய மின்சார கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

கியா இந்தியா, அக்டோபரில் 1,395 அலகுகளை விற்பனை செய்து 85% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் 760 அலகுகளையும், BYD India நிறுவனம் 737 அலகுகளையும் விற்பனை செய்து சற்றே சரிவைச் சந்தித்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாத விற்பனையான 36,108 அலகுகளுடன் ஒப்பிடுகையில், MoM அடிப்படையில் 2.61% வளர்ச்சி பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்தப் பயணிகள் வாகனச் சந்தையில் மின்சாரக் கார்களின் பங்கு கடந்த ஆண்டு அக்டோபரில் 3.5 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT