குளோபல் NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற ஹூண்டாய் வெர்னா
குளோபல் NCAP பாதுகாப்புக் கட்டுப்பாட்டு சோதனையில் 5 ஸ்டார்களைப் பெற்று அசத்தியிருக்கிறது ஹூண்டாய் வெர்னா. மேலும், 5 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற ஹூண்டாய் முதல் இந்திய தயாரிப்புக் கார் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது இந்த வெர்னா. ஹூண்டாய் வெர்னா செடானின் கட்டுமானம் சற்று நிலையற்றதாகக் கூறப்பட்ட போதும், ஹூண்டாய் வழங்கியிருக்கும் பிற பாதுகாப்பு அம்சங்களின் காரணமாக பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது இந்தக் கார். பெரியவர்களுக்கான ரேட்டிங் மட்டுமின்றி குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது ஹூண்டாய் வெர்னா.
5 ஸ்டார் ரேட்டிங்ப் பெற்ற இந்திய கார்கள்:
'சேப்டி கார்ஸ் ஃபார் இந்தியா' பிரச்சாரத்தின் கீழ் இந்த காருக்கான பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்கியிருக்கிறது குளோபல் NCAP. ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளால் பாதுகாப்பான காராக மாறியிருக்கிறது வெர்னா. 2014 முதல் இதுவரை 60க்கும் மேற்பட்ட கார்கள் சேப்டி கார்ஸ் ஃபார் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் சோதனை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முதன் முதலில் 5 ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்றது டாடா நெக்ஸான். அதனைத் தொடர்ந்து டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ N உள்ளிட்ட கார்களும் 5 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன.