2023 EICMA நிகழ்வில் புதிய மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவிருக்கும் ஹீரோ
வரும் நவம்பர் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை இத்தாலியின் மிலனி நகரில் 2023 EICMA ஆட்டோமொபைல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் தங்களுடைய புதிய மேக்ஸி ஸ்கூட்டர் ஒன்றையும், விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த பைக் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப். 150சிசிக்கும் மேல் பெரிய இன்ஜின் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர்கள் தற்போது தான் இந்தியாவில் பிரபலமாகத் தொடங்கியிருக்கின்றன. யமஹா மற்றும் ஏப்ரிலியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய மேக்ஸி ஸ்கூட்டர்களை வெளியிட்டிருக்கின்றன. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் சில மேக்ஸி ஸ்கூட்டர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
ஹீரோ ADV மேக்ஸி ஸ்கூட்டர்:
முதலில் ஹீரோ EICMA நிகழ்வில் அறிமுகப்படுத்தவிருக்கும் ADV மேக்ஸி ஸ்கூட்டர் குறித்த சில தகவல்களைப் பார்த்துவிடலாம். இந்த மேக்ஸி ஸ்கூட்டாரை யமஹாவின் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்தியாவிலும் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ. இந்தியாவில் இந்த ADV மேக்ஸி ஸ்கூட்டருக்கான டிசைனின் காப்புரிமைக்கு ஏற்கனவே பதிவு செய்திருக்கிறது அந்நிறுவனம். 14 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பெரிய விண்டுஸ்கிரீனைக் கொண்டு வெளியாகவிருக்கும் ஹீரோ ADV மேக்ஸி ஸ்கூட்டரில் எக்ஸ்ட்ரீம் 160R மாடலில் பயன்படுத்திய 163.2சிசி இன்ஜினை ட்யூன் செய்து பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ. எனவே, ட்யூன் செய்யப்பட்ட அந்த இன்ஜினானது 15hp பவர் மற்ரும் 14Nm டார்க்கைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரிலியா SX 160:
இந்தியாவில் முக்கியமான மேக்ஸி ஸ்கூட்டர்களுள் ஒன்று ஏப்ரிலியாவின் SX 160. DRL உடன் கூடிய ஸ்பிளிட் எல்இடி முகப்பு விளக்குகள், அகலமான ஹேண்டில்பார், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் 12 இன்ச் அலாய் வீல்கள் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கிறது ஏப்ரிலியாவின் SX 160 மேக்ஸி ஸ்கூட்டர். ரைடர் பாதுகாப்பிற்காக முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கும், அத்துடன் சிங்கள் சேனல் ஏபிஎஸ் வசதியும் இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கிறது. 11hp பவர் மற்றும் 11.6Nm டார்க்கை வெளிப்படுத்தும் 160.03சிசி இன்ஜினைக் கொண்டிருக்கும் இந்த மேக்ஸி ஸ்கூட்டாரனது இந்தியாவில் ரூ.1.46 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
யமஹா ஏராக்ஸ் 155:
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நல்ல பெர்ஃபான்ஸ் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர்களுள் ஒன்று யமஹாவின் ஏராக்ஸ் 155. இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் ஏப்ரான் மௌண்டடு முகப்பு விளக்குகள், ஸ்டெப்புடுஅப் சிங்கிள் பீஸ் சீட் மற்றும் 14-இன்ச் வீல்கள் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பிற்காக முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கும், கூடுதலாக CBS வசதியும் இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏராக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டரில், யமஹா R15 மற்றும் MT15 ஆகிய பைக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும், வேரியபிள் வால்வு ஆக்சூவேஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய, 14.79hp பவர் மற்றும் 13.9Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 155சிசி இன்ஜினைக் கொடுத்திருக்கிறது யமஹா. இந்தியாவில் இந்த ஸ்கூட்டரானது ரூ.1.47 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.