ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது ஹார்லி டேவிட்சன் X440-யின் முன்பதிவு
இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் தங்களது முதல் பைக்கான X440-யை ஹீரோ நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் வெளியிட்டது அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன். ரூ.2.29 லட்சம் முதல் ரூ.2.69 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் மூன்று வேரியன்ட்களாக இந்தப் புதிய X440-ஐ அறிமுகப்படுத்தியிருந்தது ஹார்லி டேவிட்சன். இந்த பைக்குக்கு இந்திய டூ-வீலர் வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். பைக்கின் முன்பதிவு அதிகமாகி வருவதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் புதிய X440-க்கான முன்பதிவு நிறுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ரூ.5,000 செலுத்தி புதிய ஹார்லி டேவிட்சன் X440-யை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
ஹார்லி டேவிட்சன் X440: டெலிவரி எப்போது?
இந்த புதிய பைக்கின் தயாரிப்பை ராஜஸ்தானில் உள்ள நீம்ரானா தொழிற்சாலையில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது ஹீரோ. அதனைத் தொடர்ந்து, தற்போது X440-யை முன்பதிவு செய்தவர்களுக்கு அக்டோபர் மாதம் டெலிவரிக்கள் தொடங்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் X440-க்கான முன்பதிவு நிறுத்தப்படவிருக்கும் நிலையில், அடுத்த முன்பதிவு தேதி எப்போது தொடங்கும் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அடுத்த முன்பதிவு தொடங்கும் போது, புதிய X440-யின் விலை உயர்த்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கான X440 பைக்கின் டெஸ்ட் டிரைவ் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.