ஏஐ மூலம் சாலை விதிகளை மீறுவோருக்கு தண்டனை விரைவில் நடைமுறைக்கு வரும்; அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
செய்தி முன்னோட்டம்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டின் அவசியத்தை, 12வது டிராஃபிக் இன்ப்ரா டெக் எக்ஸ்போவில் வலியுறுத்தினார்.
இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5 லட்சம் விபத்துகள் நடைபெறுகின்றன. குறிப்பாக 18 முதல் 36 வயதுக்கு இடையிலானவர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் ஜிடிபியில் சுமார் 3% இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த சிக்கலை சமாளிக்க, ஏஐ'ஆல் இயங்கும் சாலை பாதுகாப்பு தீர்வுகளை உருவாக்க இந்திய ஸ்டார்ட்அப்கள் இணைந்து செயல்பட வேண்டும் என நிதின் கட்கரி கூறினார்.
இதன் மூலம், விரைவில் நாடு முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் எனத் தெரிகிறது.
பைலட் திட்டம்
நாக்பூரில் பைலட் திட்டம் சோதனை
இத்தகைய ஒரு முயற்சியாக, நாக்பூரில் தொடங்கப்பட்ட iRASTE பைலட் திட்டம், சாலை விபத்துக்களை 50% குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
நகராட்சி வாகனங்களில் ஏஐ அடிப்படையிலான மோதல் தடுப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விபத்து பகுதிகளை ஆய்வு செய்து, காரணங்களை கண்டறிந்து சாலை பாதுகாப்பை மேம்படுத்தும்.
இதற்கிடையே, கேரளாவில் ஏற்கனவே சாலைப் பாதுகாப்பிற்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில், உள்ள சேஃப் கேரளா திட்டம் 726 ஏஐ கேமராக்களை கொண்டு போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கிறது.
திட்டத்தின் ஆரம்பத்தில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட விதிமீறல்கள் பதிவானதுடன், 1,28,740 அபராதங்களும் விதிக்கப்பட்டன.
ஆனால், சில சமயங்களில் ஏஐ கேமராக்கள் தவறான விதிமீறல்களை அடையாளம் காண்பதால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.