600e கிராஸ்ஓவர் எலக்ட்ரிக் காரை 2025இல் களமிறக்க தயாராகி வரும் ஃபியட்
ஃபியட்டின் செயல்திறன் பிரிவான அபார்த், அதன் இரண்டாவது முழு-எலக்ட்ரிக் காரான 600e ஐ உலக சந்தைகளில் களமிறக்க தயாராகி வருகிறது. தற்போது விற்பனையில் உள்ள 500e ஹேட்ச்பேக்கின் வெற்றியைத் தொடர்ந்து, அபார்த் கிராஸ்ஓவர் வேரியண்டில் தயாரிக்கப்படும் 600e மூலம் எலக்ட்ரிக் கார் சந்தையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகமாகவுள்ள இந்த காரின் வடிவமைப்பு ஃபியட் நிறுவனத்தின் வழக்கமான 600 மாடலை ஒத்து இருக்கும். எனினும், குறிப்பிடத்தக்க வகையில் 600 மாடலை விட அதிக பவர் பம்ப்பைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் வரவிருக்கும் அபார்த் 600e மாடுலர் இ-சிஎம்பி இயங்குதளத்தில் உருவாக்கப்படும்.
அபார்த் 600e மாடல் விபரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்
செயல்திறன் சார்ந்த எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் காரான 600e'இன் தனித்துவமான அம்சங்களில், பிரீமியம் அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய பக்கெட் வகை இருக்கைகள், அல்காண்டரா-கிளாட் ஸ்போர்ட்டி ஸ்டீயரிங் வீல், தனித்துவமான பெயிண்ட் விருப்பங்கள் மற்றும் பெஸ்போக் அலாய் வீல் டிசைன்கள் ஆகியவை அடங்கும். இந்த காரின் என்ஜின் பவார் 192 எச்பியை கொண்டு முழு-எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்பட்ட இழுவை மற்றும் செயல்திறனுக்காக பின்புற அச்சில் இரண்டாவது மோட்டாரைக் கொண்டிருக்கலாம். 500e போன்ற சிறப்பு ஸ்கார்பியன் ட்ராக் டிரைவிங் பயன்முறையுடன், 0-100கிமீ/மணி நேரத்தை ஏழு வினாடிகளில் எட்டும் திறனை 600e மாடல் கொண்டிருக்கும்.