லிட்டருக்கு 34 கிமீ மைலேஜ் தரும் ரூ.10 லட்சத்திற்குள் இருக்கும் 5 சூப்பர் சிஎன்ஜி கார்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர வர்க்க வாகன ஓட்டிகளின் கவனம் சிஎன்ஜி கார்களின் பக்கம் வேகமாகத் திரும்பியுள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி விலை பெரும்பாலான நகரங்களில் 75 முதல் 90 ரூபாயாக இருக்கும் வேளையில், பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்கிறது. இதனால், கிலோவிற்கு 30 கிலோமீட்டருக்கும் மேல் மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்களைப் பயன்படுத்தும்போது, எரிபொருள் செலவு மூன்றில் ஒரு பங்கு குறைகிறது. உங்களது மாதாந்திர பயண தூரம் 1,500கிமீ ஆக இருந்தால், சிஎன்ஜி மூலம் பெரும் தொகையைச் சேமிக்க முடியும். இந்தியாவில் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் 5 சிறந்த மைலேஜ் சிஎன்ஜி கார்களை இங்கு விரிவாகக் காண்போம்.
செலரியோ
மாருதி சுஸூகி செலரியோ சிஎன்ஜி
இந்திய சிஎன்ஜி கார் சந்தையில் மாருதி சுஸூகி நிறுவனம் எப்போதும் முதலிடத்தில் உள்ளது. அந்த நிறுவனத்தின் செலரியோ சிஎன்ஜி மாடல், தற்போதைய இந்திய சந்தையிலேயே மிக அதிக மைலேஜ் தரும் காராகத் திகழ்கிறது. இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு தாராளமாக 34.43 கிமீ மைலேஜ் வழங்குகிறது. முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கும், தினமும் அலுவலகம் செல்பவர்களுக்கும் இதுவொரு மிகச்சிறந்த பட்ஜெட் காராகும். இதன் ஆரம்ப விலை 5.98 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
வேகன் ஆர்
மாருதி சுஸூகி வேகன் ஆர் சிஎன்ஜி
இந்திய நடுத்தர குடும்பங்களின் நீண்ட கால நம்பிக்கையாக விளங்கும் வேகன் ஆர், சிஎன்ஜி அவதாரத்திலும் அசத்தி வருகிறது. இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் இந்த கார், ஒரு கிலோவிற்கு 34.05 கிமீ என்ற அசாத்திய மைலேஜை வழங்குகிறது. செலரியோவை விட இதில் கூடுதல் ஹெட்ரூம் வசதியும், அதிக இடவசதியும் கிடைப்பதால் குடும்பத்துடன் பயணிக்க இது மிகவும் உகந்தது. இந்த காரின் சிஎன்ஜி மாடலின் ஆரம்ப விலை 5.94 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிசையர்
மாருதி சுஸூகி டிசையர் சிஎன்ஜி
அதிக மைலேஜ் மற்றும் பட்ஜெட் விலையுடன் ஒரு முறையான செடான் காரை விரும்புகிறவர்களுக்கான ஒரே தேர்வு டிசையர் சிஎன்ஜி ஆகும். இந்த கார் கிலோவிற்கு 33.73 கிமீ மைலேஜ் தருகிறது. இதன் பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் பிரீமியம் லுக் காரணமாக, டாக்ஸி ஓட்டுநர்கள் மட்டுமின்றி சொந்தமாகப் பயன்படுத்துபவர்களாலும் இது பெரிதும் விரும்பப்படுகிறது. இதன் சிஎன்ஜி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை 8.10 லட்சம் ரூபாயாக உள்ளது.
கிளான்சா
டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி
மாருதி பலேனோவின் மறுவடிவமான டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி, பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் அதிக அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. இதன் மைலேஜ் கிலோவிற்கு 30.61 கிமீ ஆக உள்ளது. மாருதி கார்களை விட இதில் கூடுதல் சொகுசு அம்சங்களும், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றுள்ளன. 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் அதிக வசதிகளும் நல்ல மைலேஜும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பொருத்தமான தேர்வாகும். இதன் ஆரம்ப விலை 8.17 லட்சம் ரூபாயாகும்.
எக்ஸ்டர்
ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி
பட்ஜெட் விலையில் எஸ்யூவி காரின் கம்பீர தோற்றம் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் வேண்டி காத்திருப்பவர்களுக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி சிறந்த தேர்வாகும். இந்த கார் கிலோவிற்கு 27.10 கிமீ மைலேஜ் வழங்குகிறது. மற்ற கார்களை விட மைலேஜ் சற்று குறைவு என்றாலும், இதில் வாய்ஸ் கமாண்ட் சன்ரூஃப் மற்றும் ப்ளூலிங்க் கனெக்டெட் கார் போன்ற நவீன வசதிகள் நிறைந்துள்ளன. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை 7 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது.