சீனா: புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி டாங் ஜுன் நியமனம்
சீனா முன்னாள் கடற்படை தளபதி டாங் ஜுனை, கடந்த நான்கு மாதத்திற்கு முன் மாயமான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு வெள்ளிக்கிழமை நியமித்தது. உலகில் சக்தி வாய்ந்த நாடாக சீனாவை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ராணுவத்தை அதிபர் ஜி ஜின்பிங் மேம்படுத்தி வரும் நிலையில், முன்னாள் கடற்படை தளபதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், சீன பாதுகாப்பு அமைச்சகத்திற்கு, பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வகுக்கும் அதிகாரம் இல்லை. அது, அதிபர் ஜி தலைமையிலான சிறப்பு குழுவின் கையில் உள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சரின் முக்கியமான வேலை, மக்கள் விடுதலை ராணுவத்தின்(PLA) முகமாக, மக்கள் மற்றும் பிற நாட்டினரிடம் இருப்பது மட்டுமே ஆகும்.
ஊழல் குற்றச்சாட்டில் விசாரிக்கப்படும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்?
62 வயதான டாங் ஜுன், மக்கள் விடுதலை ராணுவத்தின் சமீபத்திய கடற்படை தளபதியாவார். கடந்த மார்ச் மாதம் பதவியேற்று, ஆகஸ்ட் 25க்கு பின்னர் பொதுவெளியில் தென்படாத லி ஷாங்ஃபுவுக்குப், பதிலாக ஜுன் அப்பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது. உபகரணங்கள் கொள்முதல் மற்றும் மேம்பாடு தொடர்பான ஊழலுக்காக, லி விசாரிக்கப்பட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது. லி மாயமானது குறித்து தகவல் அளிக்காத பெய்ஜிங், அவரை அக்டோபர் மாதம் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மாநில கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்கியது. கடந்த மாதம் அமெரிக்காவில் சந்தித்துக் கொண்ட அமெரிக்கா அதிபர் பைடன் மற்றும் சீன அதிபர் ஜி, ராணுவ பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்ட நிலையில், டாங் ஜுன் அதில் முக்கிய பங்காற்றுவார் என கூறப்படுகிறது.