தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் அமெரிக்கா ஆதரவு கட்சி வெற்றி
தைவானில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய ஆளும் கட்சியான ஜனநாயக முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி வெற்றி பெற்றார். ஜனநாயக முன்னேற்ற கட்சி அமெரிக்க ஆதரவு கட்சியாக அறியப்படுகிறது. சீனாவில் 1911-ஆம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது. எனினும், 1927-ஆம் ஆண்டில் சீன தேசிய கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க் கொடி உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக 1949-ஆம் ஆண்டு வரை சீனாவில் உள் நாட்டுப் போர் நீடித்தது. இந்த போரில் தோல்வியை தழுவிய சீன தேசிய கட்சியினர், தென் சீன கடலில் 168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறினர். ஆனாலும் அந்த பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
சீனா அச்சுறுத்தல் காரணமாக தைவான் அங்கீகரிக்கப்படவில்லை
சீனாவின் அச்சுறுத்தல் காரணமா உலகின் பல நாடுகள் தைவானை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அதில் இந்தியாவும், அமெரிக்காவும் கூட அடக்கம். சர்வதேச அரங்கில் தற்போது வரை 14 நாடுகள் மட்டுமே தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. எனினும் ராணுவ ரீதியாக தைவானுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான், தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய் சிங் டி 53.74 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.