இந்திய இருமல் மருந்துகளுக்கு தடை: உலக சுகாதார நிறுவனம்
இந்திய இருமல் மருந்துகளைக் குடித்ததால் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த 19 குழந்தைகள் உயிரிழந்ததாக சமீபத்தில் அந்நாடு இந்தியாவின் மீது குற்றம் சாட்டி இருந்தது. உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் மேரியான் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த மருந்துகளாலேயே இந்த சர்ச்சை எழுந்தது. இந்த குழந்தைகள் உயிரிழப்பு குறித்து உஸ்பெகிஸ்தான் வெளியிட்டிருந்த அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்னும் மருந்தை குடித்ததால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்தை ஆய்வு செய்த போது, இதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது." என்று கூறி இருந்தது. இதனையடுத்து, இந்த நிறுவனத்தின் நொய்டா கிளையில் அனைத்து தயாரிப்பு பணிகளும் இந்திய அரசால் நிறுத்தப்பட்டது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை
அம்ப்ரோனால் சிரப் மற்றும் DOK-1 மேக்ஸ் சிரப் ஆகிய இரண்டு தயாரிப்புகளின் உற்பத்தியாளர் மேரியான் பயோடெக் (உத்தர பிரதேசம், இந்தியா) என்ற நிறுவனமாகும். இன்றுவரை, இந்த உற்பத்தியாளர் குறிப்பிட்ட மருந்து தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து WHOக்கு உத்தரவாதத்தை வழங்கவில்லை. இந்த இரண்டு தயாரிப்புகளிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் / அல்லது எத்திலீன் கிளைகோல் ஆகிய நச்சு பொருட்கள் கலந்திருப்பதை உஸ்பெகிஸ்தான் கண்டறிந்தது. இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரமற்ற தயாரிப்புகள் பாதுகாப்பற்றவை மற்றும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை. போதிய ஆவணங்களை வழங்காததால் மேரியான் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை நிறுத்திவிட்டோம். அதனால், சந்தைகளில் இந்த மருந்துகள் கிடைத்தாலும் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.