பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மிஸ்.யூனிவெர்ஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
இந்தோனேசியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் பிரபஞ்ச அழகி போட்டிக்கான தேர்வில் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நிகழ்ச்சி அமைப்பாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, பல போட்டியாளர்கள் இந்தோனேசிய காவல்துறையிடம் புகார் அளிக்க முன்வந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜகார்த்தாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி இந்தோனேஷியா போட்டியின் ஒரு சுற்றின் போது "மேலாடையின்றி உடல் பரிசோதனை" செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் போட்டியாளர்கள் கூறியுள்ளனர். ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 3-க்கு இடையில் நடந்த போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள், "மேலாடையின்றி உடல் சோதனைக்காக உட்படுத்தப்பட்டதாகவும், அதற்காக தங்கள் உடைகளை கழட்ட சொன்னதாகவும், தொடர்ந்து தங்கள் அனுமதி இன்றி, புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும்" குற்றம் சாட்டியுள்ளனர் போட்டியாளர்கள்.
ஆண்கள் முன்னிலையில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோகம்
தகவல்கள் படி, ஐந்து போட்டியாளர்கள் "அத்தகைய சோதனைகளுக்கு" உட்படுத்தப்பட்டதாகவும், ஆறு பேர் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் ஆகஸ்ட் 1 அன்று ஒரு ஹோட்டல் பால்ரூமில் நடந்தது எனவும் கூறப்படுகிறது. ஆண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் சோதனை நடந்ததாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 'மிஸ் வேர்ல்ட் 2015' இல் மூன்றாவது இடத்தைப் பிடித்த, முன்னாள் 'மிஸ் இந்தோனேசியா' மரியா ஹர்ஃபான்டி, இந்தோனேசியாவில் உடல் சோதனைகள் ஒரு வழக்கமான நடைமுறை என்று கூறியுள்ளார். இருப்பினும், போட்டியாளர்கள் "அத்தகைய மதிப்பீடுகளுக்கு ஆடைகளை அகற்ற வேண்டிய அவசியமில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தோனேசிய சட்டத்தின் கீழ், பாலியல் துஷ்பிரயோகம் செய்தால், 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.