அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?
அமெரிக்கா கடன் உச்சவரம்பை அடையவிருக்கிறது. அதனை உயர்த்த வேண்டும் என அமெரிக்கவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் கூறி வருகிறார்கள். கடன் உச்சவரம்பு என்றால் என்ன? அதனை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்? கடன் உச்சவரம்பு என்பது அமெரிக்கா வாங்கும் கடனின் அதிகட்ச தொகையாகும். நாட்டில் செலவினங்களுக்கு தேவையான பணம் இல்லாத போது, வருவாய்க்கும் அதிகமாக செலவு இருக்கும் போது ஒரு நாடு கடன் வாங்கும். வாங்கும் கடனுக்கு மாற்றாக அரசு பத்திரங்களைக் கொடுக்கும். பின்னர் அவை வட்டியுடன் மீட்கப்படும். கடன் உச்சவரம்பை அந்நாடு அடைந்துவிட்டால் அரசு பத்திரங்களைக் கொடுத்து கூடுதலாகக் கடன் வாங்க முடியாது. தற்போது அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு $31.4 ட்ரில்லியனாக இருக்கிறது.
கடன் உச்சவரம்பை எட்டினால் என்ன ஆகும்?
கடன் உச்சவரம்பை அந்நாடு எட்டினால், உள்நாட்டுச் செலவுகளுக்கே பணம் இருக்காது. ஏற்கனவே வாங்கிய கடனுக்கும் வட்டியோ அசலோ கட்ட முடியாது. அமெரிக்க டாலரின் மீது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறையும், இதன் காரணமாக பொருளதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கும். வேலையிழப்புகள், பணிநீக்கங்கள் அதிகரிக்கும். "போதிய பணம் இல்லாமையால் அரசு தன்னுடைய கடமையில் இருந்து தவறினால் அது அமெரிக்க பொருளாதாரம், அமெரிக்க மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உலக பொருளாதார நிலைத்தன்மை என அனைத்தையும் பாதிக்கும்" என இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸூக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அந்நாட்டின் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன். 1960-ல் இருந்து 78 முறை அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.