இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு
எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இன்று(மே 24) விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் சிதைக்கப்படும் சம்பவங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக பிரதமர் மோடி கூறினார். "பிரதமர் ஆண்டனி அல்பானீஸும் நானும் ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம்." என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பலமுறை ஆஸ்திரேலியாவில் உள்ள கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது
"இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நட்பு மற்றும் உறவுகளை சேதப்படுத்த நினைக்கும் எந்த கூறுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எதிர்காலத்திலும் இதுபோன்ற கூறுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பிரதமர் அல்பானீஸ் இன்று மீண்டும் எனக்கு உறுதியளித்தார்," என்று பிரதமர் மோடி கூறினார். கடந்த மார்ச் மாதம், பிரிஸ்பேனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலான ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவும் பலமுறை ஆஸ்திரேலியாவில் உள்ள கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16ஆம் தேதி, ஆஸ்திரேலியாவின் கேரம் டவுன்ஸில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோயில் இந்து விரோத கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்டது.