'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த குவாட் குழுவின் உச்சிமாநாடு நேற்று(மே 21) ஹிரோஷிமாவில் நடந்தது. இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொண்டனர். குவாட் உச்சிமாநாடு ஹிரோஷிமாவில் 47 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. ஆனால் தலைவர்கள் இந்தோ-பசிபிக் எதிர்கொள்ளும் அனைத்து முக்கியமான பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர். மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கான தீர்வுகளை அவர்கள் விவாதித்தனர். இந்த கூட்டத்தின் போது, சீனாவின் பெயர் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், குவாட் தலைவர்கள் சீனாவை கடுமையாக சாடினர்.
சீன அச்சுறுத்தலைகளைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்ட குவாட் தலைவர்கள்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை "வற்புறுத்தலில் இருந்து விடுவித்தல்" மற்றும் "எந்த நாடும் ஆதிக்கம் செலுத்தாத" இந்தோ-பசிபிக்கை உருவாக்குதல் ஆகியவை இந்த கூட்டத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. "வலுக்கட்டாயமாக தற்போதைய நிலையை மாற்ற முயலும் ஒருதலைப்பட்சமான செயல்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது சீன அச்சுறுத்தலைகளைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிடுவது போல் இருந்தது. ஏழை நாடுகளின் மீது தனது செல்வாக்கை உயர்த்த பொருளாதார தந்திரோபாயங்களை சீனா பயன்படுத்துவதாகவும், பசிபிக் பகுதியில் சீனா அதன் இராணுவத்தை விரிவாக்கம் செய்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் குவாட் அறிக்கையில் மறைமுகமாக கூறப்பட்டிருந்தது. G7 கூட்டத்திற்காக ஹிரோஷிமா சென்றிருந்த குவாட் தலைவர்கள், குவாட் குழு கூட்டத்தையும் அங்கேயே நடத்தினர்.