பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உட்பட பங்களாதேஷின் பல நகரங்களில் ஒரு வன்முறை அலை வீசியது. இதன் விளைவாக 97 க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவர் எதிர்ப்பாளர்கள், காவல்துறை மற்றும் ஆளும் கட்சி செயல்பாட்டாளர்களை எதிர்த்து போராடி வருகின்றனர். பிரதமர் ஷேக் ஹசீனாவை ராஜினாமா செய்யக் கூறிவரும் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் மற்றும் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்தது. கடந்த மாதம் வெடித்த போராட்டத்தில் இதுபோன்ற கடும் நடவடிக்கையை எடுத்தது இதுவே முதல் முறையாகும்.
பங்களாதேஷில் வாழும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
இதற்கிடையே மறு அறிவிப்பு வரும் வரை பங்களாதேஷிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய பிரஜைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது மற்றும் பங்களாதேஷில் உள்ள இந்திய அதிகாரிகள் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குடிமக்களை எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து, ஜனவரியில் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்த ஹசீனாவுக்கு, இந்தப் போராட்டம் பெரும் சவாலாக மாறியுள்ளது. "தற்போதைய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியப் பிரஜைகள் மறு அறிவிப்பு வரும் வரை வங்காளதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்க கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) ஆலோசனையில் தெரிவித்துள்ளது.