ஈரான் துறைமுகத்தை இயக்க இந்தியா ஒப்பந்தம்: பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய அமெரிக்கா, "ஈரானுடனான வணிக ஒப்பந்தங்களைக் கருத்தில் கொள்ளும் எவரும் பொருளாதாரத் தடைகளின் அபாயத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு, ஈரானின் ஆளில்லா வான்வழி வாகன உற்பத்தியை குறிவைத்து ஈரான் மீது புதிய தடைகளை அமெரிக்கா அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்தியா மற்றும் ஈரான் இடையேயான ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் அமெரிக்கா சார்பாக கருத்து தெரிவித்தார்.
'பொருளாதாரத் தடைகளின் சாத்தியமான ஆபத்து இருக்கிறது': அமெரிக்கா
"ஈரானும் இந்தியாவும் சபஹர் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வந்த தகவல்கள் எங்களுக்குத் தெரியும். சபஹர் துறைமுகம் மற்றும் அதன் சொந்த இருதரப்பு உறவுகள் தொடர்பாக இந்திய அரசே முடிவு செய்யட்டும். இது அமெரிக்காவுடன் தொடர்புடையது என்பதால் ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம்" என்று வேதாந்த் படேல் கூறியுள்ளார். மேலும், இந்திய நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ஈரானுடன் வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எந்தவொரு நிறுவனமும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பல நிகழ்வுகளில் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பொருளாதாரத் தடைகளின் சாத்தியமான ஆபத்து இருக்கிறது" என்று கூறியுள்ளார்.