காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு
பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இராணுவ விமானங்களை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான உணவுகளை காசாவுக்குள் தூக்கி எறிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு எந்த வகையான விமானங்கள் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. C-17 மற்றும் C-130 வகை விமானங்கள் இதற்கு பொருத்தமானவைகளாகும். அமெரிக்க விமானப்படையின் கூற்றுப்படி, C-130 வகை விமானத்தில் 16 தட்டுகளை வைத்திருக்க முடியும். அதே நேரத்தில், C-17 வகை விமானத்தில் 40 தட்டுகளை கொண்டு செல்ல முடியும்.
'ஏர் டிராப்' திட்டத்தில் இருக்கும் மிக பெரும் சவால்கள்
ஆனால், இந்த முறையில் பொருட்களை சப்ளை செய்வதற்கு, வானிலை மிக தெளிவாக இருப்பது அவசியமாகும். அதனால், அமெரிக்க இராணுவம் வானிலை நிலவரங்களை முன்கூட்டியே கண்காணிக்க வேண்டி இருக்கும். வானிலையில் கவனம் செலுத்தவில்லை என்றால், அதிக காற்று அடிக்கும் போது வானில் இருந்து வீசப்படும் பொருட்கள் வேறு இடத்திற்கு அடித்து செல்ல வாய்ப்பிருக்குறது. மேலும், காசா பகுதி அதிக மக்கள்தொகையை கொண்ட பகுதியாகும். எனவே, வானில் இருந்து வீசப்படும் பொருட்கள் அனைத்து மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது மிகவும் கடினமாக இருக்கும். இது போன்ற சவால்களை முறியடித்து, அமெரிக்கா எப்படி 'ஏர் டிராப்' திட்டத்தை செயல்படுத்த போகிறது என்பது மிக பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.