"குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீம்களை எப்படி பாதிக்க போகிறதோ': அமெரிக்கா செனட்டர் கவலை
குடியுரிமை திருத்த சட்டம், 2019ஐ(CAA) அமல்படுத்துவதற்கான விதிகளை இந்திய அரசாங்கம் அறிவிக்க இருக்கும் நிலையில், அது குறித்து அமெரிக்க செனட்டர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்க-இந்திய உறவுகள் மேலும் ஆழமடைந்து கொண்டிருப்பதால், மத வேறுபாடின்றி அனைவருக்கும் மனித உரிமைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். "ரமலான் மாதத்தில் திணிக்கப்படும் இந்த சட்டம் முஸ்லிம் சமூகத்தை எப்படி பாதிக்கப்போகிறதோ என்பதை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது" என்று செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் செனட்டர் பென் கார்டின் அமெரிக்க நாடுளுமன்றத்தில் பேசியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்நத இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் ஒரு சட்டமாகும்.
கவலை எழுப்பிய அமெரிக்க வெளியுறவுத்துறை
அண்டை நாட்டில் துப்புறுத்தப்படும் சிறுபான்மையினர்களான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்கள் பயனடைய முடியாது. அதனால், இந்த சட்டம் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிரானது என்று பலர் விமர்சித்து வருகின்றனர். கடந்த வாரம், அமெரிக்க வெளியுறவுத்துறை CAA குறித்து கவலை தெரிவித்தது . இது தொடர்பான விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. "இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் அனைத்து சமூகங்களும் சமமாக நடத்தப்படுவது ஆகியவை அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளாகும்." என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.